பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு: சென்னையில் வங்கி ஊழியர்கள் போராட்டம்!
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்க வழிவகை செய்யும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவரவுள்ள மத்திய அரசின் செயலைக் கண்டித்து இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவரவுள்ள மத்திய அரசின் செயலைக் கண்டித்து இன்றும், நாளையும் (16.12.2021 , 17.12.2021) நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் இன்று பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்கு யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU-United Forum of Bank Unions) அழைப்பு விடுத்துள்ளது.
தலைநகர் சென்னையில் வங்கி ஊழியர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசின் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி:
2021-22 பட்ஜெட்டில் இந்த ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு (Banking Laws (Amendment) Bill 2021) முன்மொழிந்தது. அதற்கான ஆயத்தத்தையும் அரசு தொடங்கியுள்ளது. வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021ஐ நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டுவர எதிர்ப்பு கிளம்பியது.
முன்னதாக மத்திய அரசுடன், பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்தை தோல்வியடைந்தது. இதனையடுத்தே வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் போராட்டம் நடத்துகின்றனர். பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்கும்போது சாமானிய மக்களின் முதலீட்டிற்கு ஆபத்து நேரலாம் என்பதே வங்கி ஊழியர்கள் சங்கத்தினரின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் 9 லட்சம் ஊழியர்கள் நடத்தும் போராட்டத்தால் வங்கிச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆதரவு:
தமிழகத்தில் நடைபெறும் வங்கி ஊழியர்கள் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், "வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தங்கள் தரப்பின் நியாயங்களை திமுக தலைவரை சந்தித்து எடுத்துக்கூறினர். இதனைக் கருத்தில்கொண்டு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக தனது முழு ஆதரவினை வழங்குகிறது.
கடன் பெற்ற விவசாயிகள், சுயதொழில் செய்யும் மகளிர், கல்விக்கடன் பெற்ற மாணவர்களிடம் மனித உரிமைகளை மீறும் மிக மோசமான நடவடிக்கைகள் மூலம் கடன்களை வசூலிக்கத் துடிக்கும் வங்கி நிர்வாகங்கள் - பெரிய நிறுவனங்கள் பெற்ற கடனை வசூலிப்பதில் காட்டுவதில்லை.
உழைத்துச் சம்பாதித்துப் பொதுத்துறை வங்கிகளில் போட்டுள்ள சேமிப்புகளைக் கூட சுரண்டுவதற்கு ஏதுவாக இதுபோன்ற வங்கி சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றிவிட மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டுவது ஜனநாயக விரோதச் செயலாகும்.
நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் நம்பிக்கையாகத் திகழும் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவினையும் - அதுதொடர்பாக அவசர அவசரமாகக் கொண்டுவரும் வங்கிச் சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து 9 இலட்சம் வங்கி ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.