TN Weather Update: வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மழை நீடிக்குமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
மே 7 அல்லது 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மே மாதம் ஆறாம் தேதி ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி உருவாகி அதனை தொடர்ந்து வருகின்ற 7,8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் இன்று சென்னையில் இருக்கும் வானிலை மையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு பகுதிகளில் தற்பொழுது வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 60 இடங்களில் கன மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், “கனமழை பொறுத்தவரையில் நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் டெல்டா மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். சென்னை மட்டும் புறநகர் பொறுத்த வரையிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மே மாதம் ஆறாம் தேதி ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி உருவாக்கி அதனை தொடர்ந்து வருகின்ற 7,8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ தமிழ்நாட்டில் 13 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்குவங்க கடல் பகுதி, தமிழக கடற்கரை பகுதிகள், மன்னர் வளைகுடா குமரி கடல் பகுதிகள், மாலத்தீவு லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என குறிப்பிட்டார்.
02.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.