மீண்டும் ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு.. ஆ ராசா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ ..!
2015 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் திமுக எம்.பி ஆ ராசா மற்றும் 5 பேருக்கு எதிராக மத்திய புலனாய்வு துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
2015 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராஜா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. விசாரணையில் அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி சொத்து வைத்திருந்தது தெரியவந்தது.
முன்னதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 16 பேர் மீது கடந்த 2015 ஆகஸ்ட் 18 ம் தேதி அன்று சிபிஐ வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்தது. அப்போது அவர்கள் ரூ. 27.97 கோடிக்கு அளவிற்கு சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அக்டோபர் 1999 முதல் செப்டம்பர் 2010 வரையிலான காலத்தில் அவரது வருமான ஆதாரங்களுடன் ஒப்பிடுகையில், சொத்து மதிப்பு நிலையற்ற தன்மையில் இருந்ததாக கூறப்பட்டது. இதன் காரணமாக ஆ ராசாவிடம் பல சிபிஐ அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணையும் மேற்கொண்டனர்.
இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டம் 1988 இன் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, டெல்லியில் 20 இடங்களிலும், தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது. ஒரே நேரத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையால் வருமான வரி கணக்குகள், சொத்து ஆவணங்கள், நிதிநிலை அறிக்கைகள் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனர். மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கைத் தொடங்க அடிப்படையாக அமைந்ததாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.






















