CM Stalin : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்..குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!
அருணாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
![CM Stalin : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்..குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...! Arunachal pradesh helicopter crash loss lives theni district jawan Chief Minister MK Stalin announced the relief 20 lakhs CM Stalin : ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்..குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/5aba70bd44e54cdcaaf4b260596fe9e41679061776522571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அருணாசலப்பிரதேசத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தேனி வீரரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
ரூ.20 லட்சம் நிவாரணம்
"அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரண்டு இந்திய இராணுவ அலுவலர்களுக்கு இரங்கல் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர். A. ஜெயந்த் அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
நேற்று (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு இராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து இன்று காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன்.
மேலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்களை நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட அறிவுறுத்தினேன்.
தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர். A. ஜெயந்த் அவர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
அருணாசல பிரதேசத்தில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. நேற்று காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் காலை 9 மணிக்கு சங்கே என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு, அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள மிஸ்ஸமாரிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9.15 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிறிது நேரம் கழித்து 2 பேரின் உடல்களை மீட்டனர். அதில் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில், மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)