கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற விண்ணப்பம்
’’தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும், தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்து வருகிறது’’
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கேட்டு விண்ணப்பத்தினை புவிசார் குறியீடு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத் தலைவருமான ப.சஞ்சய்காந்தி தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து சஞ்சய்காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும், தஞ்சாவூரில் விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காமல் இருந்தது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு அதற்கான விண்ணப்பத்தை சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில் கடந்த 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்று படுக்கையில் விளைவதால் தனி சிறப்பு பெற்று விளங்குகிறது வெற்றிலை. அதிலும் கும்பகோணம் பகுதியில் இந்த வெற்றிலை சிறப்பாக விளைவிக்கப்படுவதால், கும்பகோணம் வெற்றிலை என பெயர் பெற்று விளங்குகிறது. காவிரி படுக்கையில் திருவையாறு, ராஜகிரி, பண்டாரவாடை, ஆவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்பட்டு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு தினந்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது.
பூம்புகாருக்கு அருகே ராதாநல்லூரில் உள்ள சிவாலயத்தின் கல்வெட்டுகளின் ஆதாரம், உறையூர், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பாக்குவெட்டிகள் ஆகியவற்றை கொண்டு கிபி.10ஆம் முதல் 14 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்தே காவிரி படுக்கையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கத்தை இந்த அகழ்வாராய்ச்சி உறுதி செய்துகிறது. எனவே தான் பல நூறாண்டுகளை கடந்து, காவிரி டெல்டாவை அடக்கியுள்ள மாவட்டங்களில் பயிரிடக்கூடிய இந்த வெற்றிலை கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்தூர் வெற்றிலையை காட்டிலும் கும்பகோணம் வெற்றிலை மாறுபட்டிருக்கிறது. இத்தகைய சிறப்பு பெற்ற கும்பகோணம் வெற்றிலையை புவிசார் குறியீடு கேட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம் மற்ற பூக்களைக் காட்டிலும் தனித்து காட்டுகிறது. தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகளவில் உள்ளது. இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் சரியாக பயன்படுத்தி தோவாளை மாணிக்கமாலையை உற்பத்தி செய்கிறார்கள். வெள்ளை, சிவப்பு அரளிப்பூக்களை சம அளவில் கட்டுகிற போது அது மாணிக்கம் போன்று தோற்றமளிப்பதால் மாணிக்கமாலை என பெயர் பெற்றது. திருவாங்கூர் மகாராஜா இந்த மாலையை பார்த்தபோது, தங்கத்தின் மீது மாணிக்கத்தை வைத்தது போன்று உள்ளதாக குறிப்பிட்டுள்ளதனால் அன்றிலிருந்து இது தோவாளை மாணிக்கமாலை என அழைக்கப்படுகிறது.
அந்த மகாராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க தோவாளையில் உள்ள கைவினை கலைஞர்களால், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் திருவிழாக்களுக்கு மாணிக்க மாலையை வழங்கி வருகின்றனர். இந்த பூக்கள் தமிழகத்தில் பரவலாக விளைந்தாலும், இந்த ஊரில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு மட்டும் தான் சரியான கலை நுணுக்கத்தோடு, சரியான மடிப்புத் தன்மை மாறாமல், பூக்களின் பாகம் சேதமடையாமல் கட்டுகின்ற பாங்கு தான் இதனுடைய தனிச்சிறப்பை நிலைப்படுத்துகிறது. தற்போது சிறப்பு மிக்க இந்த தோவாளை மாணிக்கமாலையை, தோவாளை மாணிக்கமாலை கைவினை கலைஞர்கள் சார்பில், புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.