போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பிய மாணவர் உயிரிழப்பு - காவல்துறை மீது பெற்றோர் குற்றச்சாட்டு
’’இன்று இரவு 8 மணி அளவில் மர்மமான முறையில் இறந்த மாணவரின் உடற்கூறு ஆய்வு நடைபெறும் நிலையில், ஆய்வு அறிக்கை வந்த பிறகே இச்சம்பவம் குறித்த முழுவிவரம் தெரியவரும் என போலீஸ் விளக்கம்’’
போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் போலீசார் தாக்கியதால் மாணவர் இறந்ததாக கூறி உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவர். நேற்று மாலை பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மணிகண்டன், தனது டூவீலரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த இருவரும், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது, மணிகண்டன் இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம், மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்தனர்.
டிஎஸ்பி உத்தரவின்பேரில், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் போலீசார் தாக்கியதால்தான், மணிகண்டன் இறந்துள்ளார் என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மணிகண்ட னின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் முதுகுளத்தூர் - பரமக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மணிகண்டனின் உறவினர்கள் கூறுகையில், ''போலீசார் தாக்கியதால்தான், மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளார். இது குறித்து எஸ்பி நேரடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிகண்டனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மணிகண்டன் பாம்பு கடித்து இறந்திருக்கலாம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தததும் முடிவு தெரியும். போலீசார் தாக்கியதாக கூறப்படும் புகார் குறித்து விசாரிக்கப்படும்'' என்றார்.
#JusticeForManikandan என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகிவரும் நிலையில் மணிகண்டன் காவல் நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது pic.twitter.com/oc6IlqiXCs
— Kathiravan (@kathiravan_vk) December 6, 2021
இந்த நிலையில், இன்று இரவு 8 மணி அளவில் மர்மமான முறையில் இறந்த மாணவரின் உடல் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகு மாணவனின் மரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் JusticeForManigandan என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆகி வரும் நிலையில் மாணவர் மணிகண்டன் சிறையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.