பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Palar River: பாலாற்றில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிலையில், பாலாற்றில் புதிய தடுப்பணை கட்டப்படும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.
”பாலாற்றில் தடுப்பணை கட்டப்படும்”
ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு, சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியானது. இந்த, சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, ஆந்திராவில் உள்ள குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சந்திரபாபு நாயுடு, மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, 8 முறை இந்த தொகுதி சார்பாக என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குப்பம் ரயில் நிலையத்தை பெங்களூரு - சென்னை செல்வதற்கான முக்கிய சந்திப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் . மேலும், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
”தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல”- இபிஎஸ்
இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.
முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் @ncbn அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும்…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 25, 2024
எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.