மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு! பெயர் மாற்றம், நிதிப் பகிர்வு குறித்து அதிரடி கோரிக்கை
வேலை நாள்கள் 125 ஆக உயர்த்தப்பட்டது வரவேற்கத் தக்கது: ஊரக வேலைத் திட்டத்தின் பெயரையும், நிதிப் பகிர்வு முறையையும் மாற்றக்கூடாது!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் வேலைநாட்கள் 125 ஆக உயர்த்தப்பட்டதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்பதாக தெரிவித்த அன்புமணி ராமதாஸ், திட்டத்தின் பெயரையும், நிதிப் பகிர்வு முறையையும் மாற்றக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இந்தியா முழுவதும் 20 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்கான சட்ட முன்வரைவு நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சட்ட முன்வரைவில் வரவேற்கத்தக்க பல அம்சங்கள் இருந்தாலும், திட்டத்தின் பெயரையும், நிதிப்பகிர்வு முறையையும் மாற்றுவது நியாயமானது அல்ல. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும், வறுமை ஒழிப்பு ஆயுதமாகவும் திகழும் இந்தத் திட்டத்தின்படி 100 நாள்கள் வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, மொத்த பயனாளிகளில் 5 விழுக்காட்டினருக்குக் கூட முழு நாள்கள் வேலை வழங்கப்படவில்லை. அதனால், இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கையை 150 நாள்களாக உயர்த்த வேண்டும்; 50 % பயனாளிகளுக்காவது முழுமையாக 150 நாள்கள் வேலைவழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. இத்தகைய சூழலில் இந்தத் திட்டத்தின்படி வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இது பயனாளிகளுக்கு அதிக நாள்கள் வேலை கிடைக்க வகை செய்யும். அதேபோல், நடவு, அறுவடை போன்ற விவசாயப் பணிகள் நடைபெறும் நாள்களில் இந்தத் திட்டப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கும் விஷயமாகும். இதன் மூலம் வேளாண் பணிகளுக்கு தடையில்லாமல் ஆள்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும். ஆனால், இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியடிகளின் பெயர் நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதும், திட்டச் செலவில் இதுவரை இருந்த 10%க்கு பதிலாக 40 விழுக்காட்டை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகள் மாற்றப்பட்டிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த இரு அம்சங்களும் ஏற்கனவே இருந்தவாறே தொடர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின்படி எங்கு, எந்த நேரத்தில், என்ன பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரமும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















