Anbumani Ramadoss : "கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து : பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்
கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
Anbumani Ramadoss : கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, ”இந்தியாவில் பிப்ரவரி மாத வெப்பநிலை கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பதிவாகியிருப்பதாகவும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் மிகக்கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். வெப்ப அலைகளால் மனிதர்களுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் அதை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்".
”இந்தியாவில் கோடை வெப்பம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 1901&ஆம் ஆண்டுக்கு பிந்தைய 122 ஆண்டுகளின் மார்ச் மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் பதிவானது. சென்னையில் மார்ச் மாதங்களில் அதிக அளவாக 33 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவாகும் நிலையில், கடந்த ஆண்டு 38 டிகிரி செல்சியஸ் பதிவானது. நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பநிலை உச்சத்தை அடையும் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர்"
”இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த காலத்தில் வெப்ப அலைகள் வீசக்கூடும். பல நேரங்களில் வெப்பநிலை வட இந்தியாவில் 49 டிகிரி செல்சியஸ் வரையிலும், தென் மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரையிலும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். வெப்பநிலை உயர்வால் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்படுவதுடன், மனிதர்களுக்கு எண்ணற்ற உடல் நல பாதிப்புகளும் ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தேவையான வெப்பத் தணிப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், ”சென்னை போன்ற கடலோர நகரங்களில் 37 டிகிரி செல்சியசும், சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியசும், மலைப் பகுதிகளில் 30 டிகிரி செல்சியசும் வெப்ப அலையாக கருதப்படுகின்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது வெப்பத்தின் தாக்கம் இன்னும் கூடுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன், ஈரப்பதத்தின் அளவு 65% ஆக இருந்தால், அப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் 59 டிகிரி அளவுக்கு இருக்கக் கூடும். இதை மனிதர்களால் தாங்க முடியாது".
”அதிகரிக்கும் கோடை வெப்பம் மிகவும் ஆபத்தானது. இதனால் பலவிதமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பமும் அதிகமாகிறது. அதனை சமாளிக்க உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. ஆனாலும், மனித உடலால் ஓரளவுக்குத்தான் வெப்பத்தை குறைக்க முடியும். மிக அதிக வெப்பத்தால் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெப்பத் தளர்ச்சி ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப மயக்க நோய் மிக ஆபத்தானதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுமாகும்".
”சிறார்கள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள் வெப்பத்தால் அதிகம் பாதிப்படைகின்றனர். சுவாச நோய்கள், இருதய நோய்கள், நீரிழிவு குறைபாடு உடையவர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள், உயர்வெப்ப சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஓட்டுனர்கள், குடிசைவாசிகள் உள்ளிட்டோர் வெப்பத்தால் மிக அதிக அளவில் பாதிப்படைகின்றனர்.
”வெப்ப அலைகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு உடனடியாக செய்ய வேண்டியது, அது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். கோடை காலத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த பணியில் அனைத்து வகை ஊடகங்களும் தமிழ்நாடு அரசுக்கு உதவியாக செயல்பட வேண்டும்.
வெப்ப அலையால் பாதிக்கப்படும் மக்களுக்கும் மருத்துவம் வழங்குவதற்கான வசதிகள் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டும். போதிய எண்ணிக்கையில் 108 அவசர ஊர்திகள் தயார்நிலையில் வைத்திருக்கப்பட வேண்டும். கோடைக்காலத்தில் மின்சாரமும், குடிநீரும் தடையின்றி வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசுத் துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்".
”கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும் நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். திறந்த வெளிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். அதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசியுடன் மற்ற உணவுப் பொருட்களையும் அரசு இலவசமாக வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
"இனிவரும் ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளனவே தவிர, குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதைக் கருத்தில் கொண்டு, நீண்டகால வெப்பத் தணிப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வீடுகள், கட்டிடங்களின் மேற்கூறைகளை வெள்ளை வண்ணத்திலும், சூரிய ஆற்றலை ஈர்க்காத முறையிலும் அமைப்பதன் மூலம் வீடுகளுக்குள்ளும் நகரங்களிலும் வெப்பத்தை குறைக்க முடியும். நகரங்களில் மரங்களை வளர்ப்பதன் மூலம் வெப்பநிலையை 8 டிகிரி வரை குறைக்கலாம்”
”நீர்நிலைகளை பாதுகாத்தல், காற்று மாசுபாட்டை தடுத்தல், பொதுப் போக்குவரத்தை அதிகமாக்குதல், போக்குவரத்தை சீர்படுத்துதல் ஆகியவையும் நகர்ப்புற வெப்பத்தை சமாளிக்கும் வழிகளே.இவ்வாறான நடவடிக்கைகளை உள்ளடக்கிய வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி இனி வரும் காலங்களில் கோடைக் கால வெப்பத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.