Amul Cartoon Vijayakanth : "குட்பை கேப்டன்" : காற்றில் கலந்த விஜயகாந்துக்கு உருக்கமான கார்ட்டூன் வெளியிட்ட அமுல்
விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருக்கமான கார்ட்டூன் ஒன்றை அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சென்னைக்கு நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் நேரில் வந்து அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதனையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விஜயகாந்துக்கு உருக்கமான கார்ட்டூன் வெளியிட்ட அமுல்:
இந்த நிலையில், விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருக்கமான கார்ட்டூன் ஒன்றை அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், குட்பை கேப்டன் என எழுதப்பட்டுள்ளது.
இன்று மத்திய அரசு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கரு நாகராஜன், பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். அஞ்சலி செலுத்திய பின் பேசிய பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ கேப்டன் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக என்னை நேரில் செல்ல வலியுறுத்தினார். இந்த துக்கத்தில் நாமும் நிச்சயம் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.
#Amul Topical: Tribute to the much loved Tamilian actor/politician pic.twitter.com/h2R9SNkhEW
— Amul.coop (@Amul_Coop) December 29, 2023
பிரதமர் மோடி சார்பில் மலர் வளையம் வைத்தேன். கேப்டன் வீட்டிற்கு வரும் யாரும் சாப்பாடு இல்லாமல் திரும்பியது இல்லை. மிகவும் இலகிய மனம் கொண்டவர். தனக்கு கிடைத்தது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். பாகுபாடு வேறுபாடு கிடையாது என கூறியவர், புதிய வடிவத்தை உருவாக்கியவர். மனிதநேயத்தோடு இருக்கும் ஒரு அரசியல்வாதி.
"நல்ல தலைவரை இழந்துவிட்டோம்"
இது போன்ற ஒரு அரசியல் தலைவரை பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் நம்மிடையே இல்லை, அந்த துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தை இல்லை. ஒரு நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன் “ விஜயகாந்த் சினிமாவில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு கதாநாயகனாக வாழ்ந்துள்ளார். சினிமாவில் இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் அவர் தாக்கம் செலுத்தி இருக்கிறார். நாம் அவரை நேரில் சந்தித்திருக்கிறோமோ இல்லையோ ஏதோ ஒரு வகையில் அவரால் இன்ஸ்பைர் ஆகியிருப்போம் .
அப்படியான ஒரு தலைவரை நாம் இழந்திருக்கிறோம். அவருடைய இழப்பு அவரது குடும்பத்திற்கும் , தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு. இந்த நேரத்தில் நாம் அனைவரும் சேர்ந்து விஜயகாந்த் அவர்களின் ஆசை என்னவாக இருந்ததோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.