AMMK TTV Dinakaran: ”திமுக ஆட்சிக்கு இபிஎஸ்சே காரணம்; ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்” - டிடிவி தினகரன் பிரத்யேக பேட்டி..
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடுத்த பிரத்யேக பேட்டியில், அதிமுக கட்சியை மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் எனக் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடுத்த பிரத்யேக பேட்டியில், அதிமுக கட்சியை மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் எனக் கூறியுள்ளார்.
மதுரையில் டிடிவி தினகரனிடம் அதிமுக கட்சியை மீட்டெடுப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு தற்காலிகமானது தான். எடப்பாடிக்கு இது தற்காலிக வெற்றி தான். அதிமுக இயக்கம் பலவீனமாகி வருகிறது. 4 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது மக்கள் பணத்தை எப்படி தவறாக செலவிடப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். 2019 பாராளுமன்ற தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் இரட்டை இலை சின்னம், கட்சி பலம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியாக 10.5% இட ஒதுக்கீடு வழங்கியது. இந்த கழகம் இனி எப்படி வளர்ச்சி காணும்? திமுக ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். இதனை புரிந்துக்கொண்டு தொண்டர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள். அதுவரை நாங்கள் போராடிக்கொண்டிருப்போம். கட்சி எங்கள் வசம் வருவதற்கான வாய்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் அதிகமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ திருமாவளவன் எனக்கு மிகவும் பிடித்த நண்பர். பா.ம.க – திமுக கூட்டணிக்கு வந்துவிடுமோ என்ற பயம் இருக்கிறது. ஹிந்துக்கள் மத்தியில் பா.ஜ.கவிற்கு ஆதரவான உணர்வை தூண்டுகிறார். சனாதனம் மனு நீதி என்பது இங்கு பலருக்கும் தெரியாது. ஒரு சிலர் அதனை பேசுவதை எதிர்த்து கருத்து தெரிவித்து விளம்பரப்படுத்தி வருகிறார். மறைமுகமாக ஹிந்துத்துவா சக்திகள் வர வழிவகுக்கிறார்” என கூறினார்.
அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் ஒதுக்கப்பட்டுவிட்டாரா என்ற கேள்விக்கு, “ஓபிஎஸ் எனக்கு பழைய நண்பர். தர்ம யுத்தம் தொடங்கியதால் இன்றைக்கு அவருக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் தர்ம யுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் இந்த அவமானம் நேர்ந்திருக்காது. அவர் எடுத்த தவறான முடிவுகளை உணர்ந்து தற்போது சரியாகி வருகிறார்”, என தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கவனத்தை ஈர்க்க முயற்ச்சிக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் பன்மொழியாக இருந்தாலும் தமிழர்கள் தான், தவறான எண்ணத்தில் சீமான் பேசி வருவது வருத்தமளிக்கிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.