(Source: ECI/ABP News/ABP Majha)
DMK MP's Meeting: நாடாளுமன்ற கூட்டத்தொடர், பொது சிவில் சட்ட பிரச்சினை? தொடங்கியது திமுக எம்.பிக்கள் கூட்டம்..!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல்:
நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் மக்களை கவரும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சில திட்டங்களை கொண்டு வரும் முனைப்பில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ரயில்களில் ஏசி கோச்சில் சேர் கார் கட்டணம் 25% வரை குறைக்கப்பட்டது. அதேநேரம், பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினும் கடிதம் எழுதி இருந்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்:
இப்படியான நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அண்மையில் அறிவித்தார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் சட்டங்கள் மற்றும் பிற பணிகளில் அனைத்துக் கட்சிகளும் பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும் பிரகலாத் ஜோஷி கேட்டுக் கொண்டார்.
திமுக எம்.பிக்கள் கூட்டம்:
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க இன்று காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.,க்கள் கூட்டம் தொடங்கியது. திமுக தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த திமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், மக்கள் பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவது, மீனவர்கள் பிரச்னை, பொதுசிவில் சட்டம், அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை, செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு முக்கிய ஆலோசனைகளை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.