”அம்பேத்கர் சுடர் விருது நான் நடித்த "ஒரே ரத்தம்" படத்தை ஞாபகப்படுத்துகிறது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அம்பேத்கரை விதைத்தது திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடக்கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை வேப்பேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் சுடர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலிnuக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார், பேச்சாளர் நெல்லை கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருதை பெற்றுக்கொண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “அம்பேத்கர் சுடர் விருதை திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கு அர்ப்பணிக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும். ஒழிக்க முடியாவிட்டால் அதனை புறந்தள்ள வேண்டும். பெரியார் திடலில் வைத்து அம்பேத்கர் விருதை வாங்குவதைவிட வேறு என்ன பெருமை இருக்க முடியும். இந்த விருது எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது.
அண்ணல் அம்பேத்கரின் பெயரை மராத்வடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டபோது அதை பலர் எதிர்த்தார்கள். மகராஷ்டிரா அரசு கிடப்பில் போட்டது.
அதனையடுத்து மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வலியுறுத்தி தமிழ்நாட்டிலிருந்து தந்தி அனுப்பவேண்டுமென கருணாநிதி உத்தரவிட்டார். அதனையடுத்து லட்சக்கணக்கான தந்திகள் சென்றன. தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்தது.
1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயரை சூட்டியவர் கருணாநிதி. 1997ஆம் சென்னையில் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவரும் கருணாநிதிதான். மகாராஷ்டிராவைவிட தமிழ்நாட்டில் அம்பேத்கர் புகழ் பரவ காரணம் திராவிட இயக்கம்தான். அம்பேத்கரின் சாதியை ஒழிக்கக்கூடிய வழி என்ற புத்தகத்தை 1936ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தது திராவிட இயக்கம்தான். அம்பேத்கரை விதைத்தது திராவிட இயக்கம் என்பதை மறந்துவிடக்கூடாது.
கருணாநிதியின் கதை வசனத்தில் ஒரே ரத்தம் என்ற படத்தில், நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு மீண்டும் வந்து சீர்திருத்தம் செய்யும் நந்தகுமார் கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படத்தில், பண்ணையாரின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் ஒருவனாக நான் வருவேன்.
இறுதியாக நான் தாக்கப்படும்போது ஒரு போராளியின் பயணம் இது. அவன் போராடி பெற்ற பரிசு இது என்ற பாடல் வரும். அதை எழுதியதும் கலைஞர்தான். இந்த விருதை பெறும்போது அதைத்தான் நினைத்து பார்க்கிறேன்” என்று பேசினார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: இதில் எங்களுக்கு பெருமைதான்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணம் - சீமான்