Flight Cancelled: சென்னை முதல் அந்தமான் வரை செல்லும் விமானம் ரத்து.. விமான நிலையத்தில் பயணிகள் வாக்குவாதம்..
சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர்இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் இருந்து அந்தமான் செல்ல இருந்த ஏர்இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி, தொழில்நுட்பக் கோளாறால் விமானம் பழுதான நிலையில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படாத நிலையில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 122 பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. 2 மணிக்கு பயணிகள் போர்டிங்கார்டை பெற்று உடமைகளையும் விமானத்தில் ஏற்றி விட்டனர்.
ஆனால் காலை 8 மணி வரை ஏர் இந்தியா விமானம் புறப்படவில்லை. இதனால் பயணிகள் ஏர் இந்தியா அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 6 மணி நேரத்திற்கு மேலாக விமானம் தாமதமான காரணத்தினால், பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். மேலும் மாற்று விமானமும் இயக்கப்படாத காரணத்தினால் பயணிகள் கூச்சலில் ஈடுபட்டனர். இன்னமும் மாற்று விமானத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினால் பயணிகள் பலர் விமான நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 5 மணிக்கு புறப்பட இருந்த விமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது என்பதை பயணிகளுக்கு முறையே தெரிவிக்காமல், தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கு மேலாக புறப்படாமல் இருக்கவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறிய நிலையில் பயணிகள் பல மணி நேரமாக காத்துக்கிடக்கின்றனர். இந்த விமானத்தில் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைத்து வயதினரும் பயணம் மேற்கொள்ள இருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைவருமே விமான நிலையத்திற்குள்ளேயே காத்துக்கிடக்கின்றனர்.
தற்போது வரை மாற்று விமானம் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலையத்தில் இருக்கும் ஏர் இந்தியா விமான அலுவலகத்தில் ஒன்று திரண்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் மாற்று விமானம் ஏற்பாடு செய்து தரப்படும் என ஏர் இந்தியா நிர்வாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.