ADMK statement | ”ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்துவதற்கு சிறிதும் இடமில்லை” - அதிமுக அறிக்கை
முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கபில் பணமோசடி புகார் விவகாரத்தை அடுத்து கட்சித் தலைமை அறிக்கை விடுத்துள்ளது.
![ADMK statement | ”ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்துவதற்கு சிறிதும் இடமில்லை” - அதிமுக அறிக்கை AIADMK releases statement to admk cadres over nilofer kafeel's row ADMK statement | ”ஆசைக்கும், தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்துவதற்கு சிறிதும் இடமில்லை” - அதிமுக அறிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/07/a14a11ef6b96327b16948917e4fff09d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பண மோசடி புகார் தொடர்பாக அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் நிலோஃபர் கஃபில் நீக்கப்பட்டதை அடுத்து அந்தக் கட்சித் தலைமை கழக உறுப்பினர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம். எண்ணிலடங்கா கொள்கை வீரர்களின் ரத்தம் சிந்திய தியாகத்தாலும், வியர்வை சிந்திய உழைப்பாலும் உருவான இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ் மக்களின் உயர்வும், தமிழ் நாட்டின் வளர்ச்சியும், சமத்துவ, சகோதர சமூகத்தினைப் படைக்கும் உன்னத நோக்கமும் தான் நம் இயக்கத்தின் இலக்குகள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் தான் நேற்றும், இன்றும், நாளையும் நமக்குத் தலைவர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனி மனித துதிபாடல்களுக்கோ, தங்கள் ஆசைக்கும். தேவைக்கும் கழகத்தைப் பயன்படுத்தும் செயல்களுக்கோ சிறிதும் இடமில்லை. எங்களது பெயர்களை பயன்படுத்திக்கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் ரசித்ததில்லை. மாறாக, அச்செயல்களால் நாங்கள் வருத்தப்படுகிறோம்; வேதனைப்படுகிறோம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக உழைக்க விரும்புவோர் மக்கள் தொண்டில் கவனம் செலுத்துங்கள். அரசியலில் ஆர்வம் கொண்டு மேலெழுந்துவர விரும்புவோர் அறிவிலும், ஆற்றலிலும் அக்கறை கொண்டு,உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் கூறியதுபோல "மக்களிடம் செல்லுங்கள்; மக்கள் சொல்வதைக் கேளுங்கள்; மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்”. தலைமைப் பண்பும், தகுதியும் தானாக உங்களைத் தேடிவரும்.
கழகத் தலைவர்களின் பெயர்களில் பேரவைகள் அமைப்பது; கழகத் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளை அவமதிக்கும் வகையிலும், சிலரது பெயர்களையும், படங்களையும் சிதைத்து அநாகரீகமான தகவல்களையும், உண்மைக்கு மாறான செய்திகளையும், சமூக ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வெளியிடுவது; அடிப்படை காரணம் எதுவுமின்றி அறியாமையாலும், புரியாமையாலும் கழகத்தின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அடுத்து மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயணம் குறித்தும். கழகத்தின் நிலைப்பாடுகள் பற்றியும், கழக நிர்வாகத்தை விமர்சித்தும், வெகுஜன ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ, இன்னபிற சமூகத் தொடர்பு சாதனங்களிலோ, கழகப் பொறுப்பாளர்களோ, கழகத்தில் உள்ளவர்களோ யாரும் எத்தகைய கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபடக்கூடாது. கழகத் தலைமையின் கட்டளையை மீறி, இனிவரும் காலங்களில் மேற்கண்ட செயல்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.
"அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்'
என்ற வள்ளுவரின் அறிவுரையை ஏற்று, கழக உடன்பிறப்புகள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)