Justice for Manikandan | காவல் நிலையத்தில் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டால் ரத்த வாந்தி, வீக்கம் ஏற்பட்டது எப்படி?- மணிகண்டன் மரணம் குறித்து அதிமுக கேள்வி
மாணவர் மணிகண்டனுக்குக் காவல் நிலையத்தில் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் அவருக்கு ரத்த வாந்தி, வீக்கம் ஏற்பட்டது எப்படி என்று மணிகண்டனின் மரணம் குறித்து அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
மாணவர் மணிகண்டனுக்குக் காவல் நிலையத்தில் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் அவருக்கு ரத்த வாந்தி, வீக்கம் ஏற்பட்டது எப்படி என்று மணிகண்டனின் மரணம் குறித்து அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவர். நேற்று மாலை பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மணிகண்டன், தனது டூவீலரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
அவரை விரட்டிச் சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த இருவரும், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது, மணிகண்டன் இறந்துபோனது தெரியவந்தது. இது குறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம், மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்தனர். இதுதொடர்பாக #JusticeForManikandan என்ற ஹேஷ்டேகும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:
''முதுகுளத்தூரில் உரம் வாங்கச் சென்ற 21 வயது மாணவன், வாகன சோதனையின்போது காவலர்களால் கைது செய்யப்பட்டதோடு, அவரது வாகனமும், தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் பெற்றோர்கள் மகனைப் பார்த்தபோது நடக்கமுடியாமலும், உடல்நிலை சரியில்லாமல் ரத்த வாந்தி எடுத்ததாகவும், முக்கிய இடங்களில் வீக்கம் இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையத்தில் அறிவுரை மட்டுமே வழங்கப்பட்டதாக மாவட்ட எஸ்பி தெரிவிக்கும் நிலையில் உடல்நிலை சரியில்லாமல் போனதும், உடலில் வீக்கங்களும் வந்ததும் எவ்வாறு?
முதுகுளத்தூரில் உரம் வாங்க சென்ற 21 வயது மாணவன், வாகன சோதனையின்போது காவலர்களால் கைது செய்யப்பட்டதோடு, அவரது வாகனமும்,தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். (1/4) #JusticeForManikandan pic.twitter.com/1BJQPmoCu3
— AIADMK (@AIADMKOfficial) December 6, 2021
இந்த விடியா அரசு விசாரணையைத் தீவிரப்படுத்தி உண்மையை விளக்க வேண்டும். போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட மரணமெனில், காரணமானவர்களுக்கு தண்டனையை உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்''.
இவ்வாறு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
மூடி மறைக்காமல் முழு விசாரணை தேவை: அண்ணாமலை
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், ''ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சார்ந்த சகோதரர் மணிகண்டனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது!
வாகனப் பரிசோதனையின்போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர், காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு ஏற்கனவே கேள்விக்குறியாக உள்ள நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது!
— K.Annamalai (@annamalai_k) December 6, 2021
வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி
1/2 pic.twitter.com/3Be4Q8mofw
சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்'' என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.