Erode East By Election: ஒப்புதல் படிவங்களை சமர்பிக்கும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்.. எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்.. இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா?
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கின்றனர்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஈரோடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் அறிவித்தது முதல் திமுக வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க அதிமுக தரப்பில் பல குழப்பங்கள் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (எடப்பாடி தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சென்னையில் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.
வேட்பாளர் அறிவிப்புக்கு பின் பேசிய ஓபிஎஸ், “ பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன்" என தெரிவித்தார்.
இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் டெல்லி சென்றனர். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் படிவங்கள் பெறப்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ள 2600 பொதுக்குழு உறுப்பினர்களில்
சுமார் 90 சதவீதம் பேர், எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளர் தென்னரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தகவல் தெரிவித்தார். இந்நிலையில், வேட்பாளர் தேர்வுக்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்கள் மற்றும் அறிக்கையுடன் டெல்லி செல்ன்றார் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன். அவருடன், சி.வி.சண்முகம் மற்றும் வழக்கறிஞர்களும் உடன் சென்றனர்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் படிவங்களை இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளார் தமிழ்மகன் உசேன்.
தமிழ்மகன் உசேன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக ஓபிஎஸ் அணி புகார் எழுப்பியிருந்த நிலையில், தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவை ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கவுள்ளது.