அதிமுக பிரச்னைக்கு முடிவா? ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்...பொதுக்குழு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு...!
அதிமுக பொதுக்குழு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே இரட்டை தலைமை தொடர்பான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் முடிவில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓபிஎஸ் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். அதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு கடந்த 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க நாங்கள் விரும்புகிறோம் என நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அதைதொடர்ந்து மூன்றவாது நாளாக இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, நண்பகல் 12 மணிக்கு அதிமுக பொதுக்குழு தொடர்பான இறுதி விசாரணை நடைபெற்றது.
இதைதொடர்ந்து, ஈபிஎஸ் தரப்பு வாதத்தை கேட்டு இருதரப்பு வாதங்களையும் இன்றே முடிக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கை இந்த வாரத்திற்குள் முடிக்க விரும்புவதாக நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இந்த வாரத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாள் விசாரணை:
கடந்த 4ஆம் தேதி விசாரணை தொடங்கியபோது, ஓபிஎஸ், ஈபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின் கீழ் வரும் என தெரிவித்தனர்.
அவைத்தலைவர் அதிகாரம் என்ன?
இரண்டாவது நாள் விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பு தனது வாதங்களை முன்வைத்தது. அதில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது, அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது என வலியுறுத்தப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அதிமுகவில் அவைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகள் என்னவென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர் என ஓபிஎஸ் தரப்பு விளக்கமளித்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர முயல்வது சட்டவிதிகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறுக்கு வழியை பயன்படுத்திய ஈபிஎஸ்:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது 5 ஆண்டு பதவிக்காலம் கொண்டது. 5 ஆண்டுகளுக்கு கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி. நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும்.
பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது உட்பட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி.
ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என மாற்றம் கொண்டு வந்த பின், ஈபிஎஸ் குழப்பத்தை உருவாக்குகிறார். ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவர் இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு. இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி அதில் முடிவுகளை எடுத்தது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என, ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுகவின் கட்சி முடிவுகளை அடிப்படை தொணடர்கள் மூலமாக எடுக்க எம்.ஜி.ஆர் விரும்பியதாக ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது. தனது விருப்பத்தின் பேரிலேயே கட்சியின் விதிகளை எம்.ஜி.ஆர் அமைத்ததாகவும் சில முக்கிய விதிமுறைகளை எப்போதும் மாற்றியமைக்க கூடாது என அவர் நினைத்ததாகவும் ஓபிஎஸ் தரப்பு வாதம் மேற்கொண்டது.
கட்சி விதிகளை எல்லாம் அவசர கதியில் பழனிசாமி தரப்பினர் மாற்றியதாகவும் அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றி அமைக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், தீர்மானங்களை நிராகரிப்பதாக கூறி அதை பொதுக்குழு ஏற்றதாக அறிவித்தது அதிகார துஷ்பிரயோகம் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதைகேட்ட நீதிபதிகள், பொதுக்குழு தொடர்பான விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.