Rajendra Balaji: ராஜேந்திரபாலாஜியின் தலைமறைவு இதற்காகத்தான்..!? நாளை முடியுமா இந்த நாடகம்? என்ன நடக்கிறது?
முன் ஜாமினை பெற்றுக்கொண்டு வெளிவர வேண்டுமென்று ராஜேந்திரபாலாஜி திட்டமிட்டதாக தெரிகிறது.
டிசம்பர் 17ஆம் தேதி முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில், வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார் என்று விருதுநகர் காவல்துறை கூறியுள்ளது. மேலும், ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தை அவசரமாக முடித்துக்கொண்டு காரில் சென்றுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
முன் ஜாமினை பெற்றுக்கொண்டு வெளிவர வேண்டுமென்று ராஜேந்திரபாலாஜி திட்டமிட்டதாக தெரிகிறது. முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கடந்த சனிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி மேல்முறையீடு செய்தார். அவரின், இந்த மேல்முறையீடை பதிவாளர் இன்று ஏற்றுக்கொண்டு, வழக்கு எண்ணும் வழங்கப்பட்டுவிட்டது. இதனால் வழக்கு குறித்து ராஜேந்திரபாலாஜியின் தரப்பினர் நீதிமன்றத்தில் நாளை முறையிடலாம். முறையீட்டை ஏற்றுக்கொண்டு ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கினால், ராஜேந்திரபாலாஜியின் தலைமறைவு நாடகம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.
ராஜேந்திர பாலாஜி வழக்கு விவரம்:
ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்மீதான விசாரணையின்போது, ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் ராஜேந்திர பாலாஜி தரப்பில் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்டு வழக்கு எனவும் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்