உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு இந்த அரசின் அவலநிலையை எடுத்துச்சொல்வோம்.
அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணி அமையும் என பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்தார்.
அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எப்போதும் இல்லாத அளவு பிரமாண்ட கலைநிகழ்ச்சிகள் உட்பட பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றது. மேலும் நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தும் தடபுடலாக பரிமாறப்பட்டது.
இதையடுத்து அதிமுக செயற்குழு பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ”அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி நிச்சயமாக உறுதியாக அமையும். நீங்க நினைப்பீங்க... இப்படித்தான் பொதுச்செயலாளர் சொன்னாரு நாடாளுமன்றத் தேர்தலில் என பல பேர் நினைக்க தோணும். நாடாளுமன்றத்தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. இது நம்முடைய தேர்தல். அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும். மக்கள் விரும்புகின்ற கூட்டணி அமையும். அனைவரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பொதுத்தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெல்லும். ஆட்சியை பிடிப்போம். கடந்த கால ஆட்சி வேறு. 2026ல் வரும் ஆட்சி வேறு விதமாக இருக்கும்.
234 தொகுதியில் ஜனவரி 2025ல் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு இந்த அரசின் அவலநிலையை எடுத்துச்சொல்வோம். நான் உங்களுக்காக இரவு பகல் பாராமல் உழைத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்காக நான் துணை நிற்கிறேன். அதேபோல் கழகத்துக்காக நீங்கள் துணைநிற்க வேண்டும். 2026 மக்கள் விரோத ஆட்சியை விரட்ட சூளுரை ஏற்போம்.
2026 ஆம் ஆண்டு நமக்கு ஒரு பொற்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. கழக ஆட்சி அமையும். அதுவரை அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வை நிர்வாகிகள் ஏற்படுத்த வேண்டும். யானைக்கு பலம் தும்பிக்கை. நமக்கு பலம் நம்பிக்கை. எந்த ஒரு மனிதனுக்கும் நம்பிக்கை இருந்தால் அவன் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அரசியல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம்” எனத் தெரிவித்தார்.