Pongal Wishes : "உலகெங்கும் வாழும் தமிழர்களே.. தை பிறந்தால் வழி பிறக்கும்": ஓ.பி.எஸ் பொங்கல் வாழ்த்து..
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு மக்களுக்கு "பொங்கல் திருநாள்" வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், கழகப் பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என்று குறிப்பிட்டு ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு மக்களுக்கு "பொங்கல் திருநாள்" வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலககெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளப் பெருக்குடனும், உவகையுடனும், உற்சாகத்துடனும் மகிழ்ந்து கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பயிர் விளையக் காரணமாயிருந்த இயற்கைக்கு விவசாயிகள் நன்றி செலுத்தும் நாளாகவும், அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், சாதி, மாத வேறுபாடுகளை கடந்து அனைவராலும் கொண்டாடப்படும் தமிழர் திருநாள். கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பாளையில் புத்தரிசியிட்டு, "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை பொங்கல் பண்டிகை.
உழவுத் தொழில் வேறு தொழில் செய்பவர்களுக்கெல்லாம் உணவளித்துத் தாங்குவதால், உழவர்கள் உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றவர்கள் என்றார் வள்ளுவப் பெருந்தகை. இத்தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், அவர்களுடைய வருமானத்தை பெருக்கிடும் வகையில், உழவர் பாதுகாப்புத் திட்டம் என்னும் மாபெரும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் காட்டியவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
உழவர்கள் ஆக்கமும், ஊக்கமும் பெற்று மகிழும் நாள்தான் மகிழ்ச்சித் திருநாள். பொங்கல் திருநாளில் தீய எண்ணங்கள், பொராமை, அறியாமை, ஆணவம் அகன்று நாட்டில் நன்மை செழிக்க நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பதற்கேற்ப, இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்! இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள் தினந்தோறும் செழிக்கட்டும் செல்வங்கள் என்று நெஞ்சார வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.