தமிழக பகுஜன் சமாஜ் கட்சிக்கு புதிய மாநில தலைவர்.. யார் இந்த வழக்கறிஞர் ஆனந்தன்?
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக பதவி வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதை அடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய செயற்குழு கூட்டம் நடந்தது.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக பதவி வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நிலையில், புதிய தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து, மாநில தலைவரை தேர்வு செய்வதற்கான செயற்குழு கூட்டம் சென்னை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு புதிய தலைவர்: மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் அசோக் சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநில தலைவராக யாரை தேர்வு செய்வது? தேசிய தலைமை யாரை அறிவிக்க உத்தரவிட்டது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், வழக்கறிஞர் ஆனந்தனை புதிய மாநில தலைவராக தேர்வு செய்வதாக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதோடு, கொலையான முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில துணை தலைவராக இளமான சேகர், மாநில பொருளாளராக கமலவேல்செல்வன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால்சாமி கோவில் தெருவில் வசித்து வந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5 ஆம் தேதி இரவு தனது வீட்டு வேலை நடந்துக் கொண்டிருக்கும் இடத்தில் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியோடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. அதில் டெலிவரி ஊழியர்கள் போல் வந்த கும்பல் ஒன்று ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி விட்டு 3 இருசக்கர வாகனங்களில் தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா, அவரது நண்பர்கள் என கூறப்படும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டன்ர். இதனிடையில் விசாரணையின் போது தப்பியோட முயன்றதால் திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டரில் சுட்டதைத் தொடர்ந்து திருவேங்கடம் உயிரிழந்தார். நேற்று, திருவள்ளூரைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.