ADMK - BJP: அதிர்ச்சி கொடுத்த இபிஎஸ்.. ஆடிப்போன பாஜக.. மாறிப்போன அரசியல் கணக்கு..!
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், வலுவான கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் பாஜக இறங்கியது. குறிப்பாக, தென்னிந்தியாவை குறிவைத்து பாஜக வேலை செய்து வருவதாகக் கூறப்பட்டது.
அதிமுக - பாஜக இடையே மோதல்:
அந்த வகையில், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம், ஜன சேனா கட்சிகளுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
அதேபோல, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாஜக திட்டமிட்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு வருட காலமாக அதிமுக, தமிழ்நாடு பாஜகவுக்கிடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக:
வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரண்டு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி வரை சென்று, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து அண்ணாமலை குறித்து புகார் அளித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பாஜக தேசிய தலைமை உடன்படவில்லை என தகவல் வெளியானது.
மாறிப்போன அரசியல் கணக்கு:
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த முடிவு பாஜகவுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், வலுவான கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஏற்கனவே, 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு எதிராக தமிழ்நாட்டில் எதிர்ப்பு மனநிலை நிலவி வருவதாகவும் தற்போது அதிமுக கூட்டணியில் விலகி இருப்பது அதற்கு மேலும் நெருக்கடியை தரும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பாஜக தலைமையில் ஒரு கூட்டணி உருவாகலாம் என கூறப்படுகிறது. அந்த கூட்டணியில், சசிகலா, டி.டி.வி. தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பாமக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் உள்ளிட்டோர் இணையலாம் என அரசியல் வட்டாரங்களில் முணுமுணுக்கபடுகிறது. இவர்கள், அனைவரையும் இணைந்தாலும், மக்களவை தேர்தலில் இவர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.