கலை கல்லூரி நிரம்பி வழியுது.. இன்ஜினியரிங் காத்து வாங்குது.. MLAவுக்கு அமைச்சர் சொன்ன பதில்!
தமிழகத்தை பொறுத்தவரை 2,00,348 பொறியியல் இடங்கள் உள்ள நிலையில் அதில் 1,28,474 பேர் மட்டுமே சேர்ந்துள்ளார்கள். 71,934 இடங்கள் காலியாக உள்ளது
தமிழகத்தில் மொத்தமுள்ள 2,00,348 பொறியியல் இடங்கள் உள்ள நிலையில் அதில் 1,28,474 பேர் மட்டுமே சேர்ந்துள்ளதாகவும், 71,934 இடங்கள் காலி இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் உள்ளதாகவும் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேள்வி நேரத்தில் திருப்பூர் எம்.எல்.ஏ மகேந்திரன் கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் பொன்முடி இதனை தெரிவித்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: மடத்துக்குளம் தொகுதி அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் 6 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், 13 சுயநிதி பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளும், 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், ஓர் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 31 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் அம்மாவட்ட மாணாக்கர்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்வது வருவதால் மடத்துக்குளம் தொகுதியில் புதிய பொறியியல் கல்லூரி தொடங்கி வேண்டிய அவசியம் எழவில்லை
மகேந்திரன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ: திருப்பூர் மாவட்டம் 2009ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை +2 தேர்வில் மாவட்ட அளவிலான முதல் 5 இடங்களை பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி இல்லாததால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் வெளிமாவட்டத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மாணவிகள் வெளிமாவட்டத்திற்கு சென்று பயில பெற்றோர்கள் விரும்பாததால் பொறியியல் துறையை தேர்வு செய்யாமல் கலை அறிவியல் துறையை தேர்வு செய்கின்றனர். எனவே புதிதாக அரசு பொறியியல் கல்லூரி அமைக்க அரசு முன்வருமா?
பொன்முடி, உயர்க்கல்வித்துறை அமைச்சர்: இப்போது வைத்திருக்கும் பொறியியல் கல்லூரி எல்லாம் மூடும் சூழல் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்த 6 கல்லூரிகளில் ஒன்று மூடப்பட்டுவிட்டது. தமிழகத்தை பொறுத்தவரை 2,00,348 பொறியியல் இடங்கள் உள்ள நிலையில் அதில் 1,28,474 பேர் மட்டுமே சேர்ந்துள்ளார்கள். 71,934 இடங்கள் காலியாக உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 2010 பொறியியல் இடங்களில் 782 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார். தொழில்முனைவோர், பல்கலைக்கழக துணை வேந்தர்களை இணைத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். புதிய சிலபஸ்களை கொண்டு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் சேர்வார்கள், வேலை இல்லாமல் இருந்தால் மாணவர்கள் பொறியியலில் எப்படி சேரமுடியும். ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் கல்லூரிகளில் கூட்டம் வழிகிறது. பொறியியல் கல்லூரியின் அட்மிஷன் என்பது இந்த ஆண்டும் இப்படிதான் இருக்கும் என கருதுகிறோம்.