Transport Commision: 15 வது ஊதிய ஒப்பந்தம்! 14 பேர் கொண்ட குழு அமைப்பு - கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு
15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
15 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்துக் கொள்வதற்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
14வது ஊதிய ஒப்பந்தம்:
இது தொடர்பான அரசு கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், “தொழிலாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தமானது 31.08.2023 அன்றுடன் முடிவடைந்த நிலையில், போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியவை புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அரசுக்கும், போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கும் அளித்து, 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்க கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இது குறித்து தேவையான பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கைகள் தொடங்க தேவையான வழிகாட்டுதல்களை அளிக்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
14 உறுப்பினர்கள் குழு:
மேற்கண்ட சூழ்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு கவனமாக பரிசீலனை செய்து, அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு, தொழிற்தகராறு சட்டம், 1947. பிரிவு 12(3) - இன்கீழ், 15 - ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்துக் கொள்வதற்கு 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து அரசு ஆணையிடுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் கட்ட பேச்சுவார்த்தை:
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிற்சங்களுடன் 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வரும் புதன்கிழமை (பிப்ரவரி 21,2024) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.ஐ.டி.யு. மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், ”ஓய்வூதியர்களின் பஞ்சப் படியை அமல்படுத்த வேண்டும். எட்டு ஆண்டுகளாக நிலுவையில் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் இருக்கும் தொழிலார்கள் 14 மாதங்களுக்காக வழங்கப்படாமல் இருக்கும் பஞ்சப் படியை தாமதிக்காமல் வழங்க வேண்டும். 15-வது ஊதிய பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசு தரப்பில் பேச்சுவார்த்தை குழுவை அமைத்து ஆணை பிறப்பித்துள்ளோம். அதில் 14- பேர் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.