நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்துள்ளது. தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்தனர்.
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்துள்ளது. சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு மனுவை நிராகரித்தார்.
இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
பின்னர், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து தமிழக போலீசார் தெலங்கானாவில் முகாமிட்டு தங்கி அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்துள்ளது.
முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கஸ்தூரி முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில் கஸ்தூரி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் 4 பிரிவுகள் பிணையில் வெளியில் வரமுடியாத வழக்குகள் ஆகும் எனவும் வாதாடினார். மேலும் ஜாமின் தரக்கூடாது எனவும் கோரினார்.
இதைத்தொடர்ந்து வாதாடிய கஸ்தூரி தரப்பு வழக்கறிஞர், “கஸ்தூரி சிலரை மட்டுமே குறிப்பிட்டார். பொதுவாக சொல்லவில்லை. இருந்தாலும் வருத்தம் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
அப்போது பேசிய நீதிபதி “சிலரை மட்டுமே அவர் குறிப்பிட்டார் என்றால் ஏன் அந்தப்புரம் என்ற வார்த்தை வருகிறது? தெலுங்கு பேசும் பெண்கள் ஏன் வருகிறார்கள்? அவரின் வருத்தம் தெரிவிக்கும் பதிவு அவர் பேசியதை நியாயப்படுத்துகிறார் என்ற தோற்றத்தை கொடுக்கிறது. அந்த குறிப்பிட்ட வார்த்தைக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.