தவெக முதல் மாநாடு.. அதிகாலையில் பந்தல் கால் நடும் விழா: கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
தவெக முதல் மாநாடு பந்தக்கால் நடும் விழா காலை 4 மணி முதல் 6 மணிவரை நடைபெற உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27-ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளை தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான பூஜை காலை 4 - 6 மணிக்கு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். மாநாடு நடத்த இடம் வழங்கிய நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டிற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்துவர பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பந்தக்கால் நடும் விழா நாளை அதிகாலை நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பிறகு, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் மற்றும் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளது.
தமிழக வெற்றிக்கழக மாநாடு
தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநில மாநாட்டை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் இம்மாதம் 23-ந் தேதி நடத்த இருப்பதாக முடிவு செய்திருந்தனர்.
இம்மாநாட்டுக்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் குறிப்பிட்ட நாட்கள் தேவைப்படும் என்பதால், ஏற்கனவே முடிவு செய்த தேதியில் மாநாட்டை நடத்துவது சிரமம் என்பதால் தேதி தள்ளிப்போனது. தொடர்ந்து, மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப்பிறகு தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி நடத்தப்படும் என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அக்கட்சியினர் மற்றும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஏற்கனவே செப்டம்பர் 23-ந் தேதி மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அக்கட்சியினர் அனுமதி பெற்றிருந்த நிலையில் மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதால் அந்த தகவலை மீண்டும் கடிதம் மூலம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெற்றனர். மேலும் போலீசார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.