பள்ளிகளில் சாதி பாகுபாட்டைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் - எம்.பி ரவிக்குமார்
பள்ளிகளில் சாதி பாகுபாட்டைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நோட்டீஸ்
பள்ளிகளில் சாதி பாகுபாட்டைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இன்று நாடாளுமன்றத்தில் விதி 377 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நோட்டீஸ்.
அவர் அளித்த நோட்டீஸில் , அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை ஏற்படுத்துவதற்கு பள்ளிகளில் உள்ள பாகுபாடுகளைக் களைவது இன்றியமையாததாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் , பள்ளிக் குழந்தைகளை பாகுபாடுகள், கொடுமைப்படுத்துதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான விதிகளை வகுத்திருக்கிறது. இது அரசின் வழிகாட்டும் கோட்பாடுகள் உறுப்பு 39 (இ) மற்றும் 39 (எஃப்) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது , குழந்தைகளின் இளமைப் பருவத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, சுதந்திரமும் கண்ணியமும் நிரம்பிய சூழலில் அவர்கள் வளரவேண்டும் என்பதை உறுதி செய்கிறது.
அடையாளங்களின் அடிப்படையிலான பாகுபாடு, இளம் மனங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்துகிறது, இது அவர்களின் கல்வி முன்னேற்றத்தைத் தடுப்பது மட்டுமின்றி, சமூகப் பிளவுகளையும் மற்றவர்களைப் பகையாகப் பார்க்கும் தீங்குமிக்க நடைமுறையையும் நிலைநிறுத்துகிறது. ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாகவும், கண்ணியத்தோடும் , பாகுபாடுகளுக்கு அஞ்சாமல் கல்வியைத் தொடரக்கூடிய சுதந்திரமான சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியமானது. இது எதிர்காலத்தில் கருணையும் இரக்கமுமுள்ள அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது.
பாகுபாடு இல்லாத கல்விச் சூழல்
பாகுபாடு இல்லாத கல்விச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பள்ளிகளில் சாதிப் பாகுபாடுகளை ஒழிப்பதில் கவனம் செலுத்தும் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்கு உடனடியான , உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். பட்டியல் சாதி (SC) மாணவர்களின் மேம்பாட்டுக்கும், நல்வாழ்வுக்கும், தரமான கல்விக்கும், அதை அடைவதில் சம வாய்ப்பை உறுதிசெய்வதற்கும் பயனுள்ள நடவடிக்கைகள் அவசியம். பள்ளிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு உடனடியாகக் கவனம் செலுத்துமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.