TN Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! எந்தெந்த பகுதிகளில்? லேட்டஸ்ட் மழை அப்டேட்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 3 மணி நேரம்:
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் , திருப்பத்தூர், வேலூர், ராணிபேட், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை வாய்ப்பு:
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
வரும் 22ஆம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் , பாலசந்திரன் தமிழக கடற்கரைப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, குமரிக்கடல் பகுதியிலும் இரு வளிமண்டல கீழுடுக்கு சுழற்சி நிலவி வருவதாக கூறினார். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.