TN Rain Alert: வேலைக்கு கிளம்புறீங்களா? காலை 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? மழை அப்டேட் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 3 தினங்களாக மழை பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் மழை என்பது குறைவாக தான் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு 400 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் , சென்னையில் ஜூன் மாத மழை 295 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் பெய்யக்கூடிய அதிகபட்ச மழையின் அளவு என்பது 4 செ.மீ ஆகும். ஆனால் கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. நேற்றைய முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவானது. நேற்று சுமார் 6 செ.மீ வரை மழை பதிவானது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு ஜூன் மாதம் 295 சதவீதம் சென்னைக்கு அதிக மழை கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் கூடுதல் மழை பொழிவு இருக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது. அதே போல் இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் வெயில் சுட்டெரித்தது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது. மக்கள் செய்வதரியாது திக்குமுக்காடிப்போனர். குறிப்பாக சென்னையில் வெப்பநிலை என்பது 42 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவானது. வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு கூட ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் தற்போது சூழல் தலைகீழாக மாறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியே உள்ளது. இந்த வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
21.06.2023: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23.06.2023 மற்றும் 24.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.