TN Rain Alert: மிரட்டிய புயல்.. சென்னையில் 50% கூடுதலாக பதிவான வடகிழக்கு பருவமழை..
சென்னையில் இன்று வரை 50 % கூடுதலாக வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை 50% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக 718.5 மிமீ பதிவாக வேண்டிய சூழலில், 1078.2 மிமீ மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நாளை (டிசம்பர் 9 ஆம் தேதி) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை முதல் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று காலை முதல் சின்னமலை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை என பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயலால் அதி கனமழை பெய்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடுமையான சேதாரம் ஆன நிலையில் மீண்டும் மழை பெய்து வருவது மக்களிடையே பீதியடைய வைத்துள்ளது.
காற்றின் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 50% கூடுதலாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை இயல்பாக 718.5 மிமீ பதிவாக வேண்டிய சூழலில், 1078.2 மிமீ மழை பெய்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.