ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்வதைக் கூட கேட்பதில்லை முதல்வர் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதை பார்க்க முடிகிறது - திருமாவளவன்
முதல்வர் சொல்வதையே அதிகாரிகள் கேட்பதில்லை என விசிக தலைவர் தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கேள்வி: அக்டோபர் 2ல் மதுவிலக்கு மாநாட்டை நடத்துகின்றீர்கள். அதற்கு என்ன காரணம் ? நீங்கள் மது ஒழிப்பு மாநாடு நடத்தினால் மட்டுமே மதுவை ஒழித்துவிட முடியும் என நினைக்கின்றீர்களா ?
மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை. எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து களமாடினால் இதனை சாத்தியப்படுத்த முடியும். இதனை தமிழ்நாடு மட்டுமல்ல அகில இந்திய அளவில் அதற்கு ஒரு தேசிய கொள்கை வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 47 வந்து அதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஆகவே இந்திய ஒன்றிய அரசுக்கும் இந்த கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம். இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும் அதற்கென்று தனி சட்டத்தை இயற்ற வேண்டும். தமிழக அரசு படிப்படியாக மதுக்கடைகளையும் மூட வேண்டும். முற்றிலுமாக மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் மாநாட்டின் கோரிக்கை.
கேள்வி: ஆளுங்கட்சியான திமுகவோடு கூட்டணியில் இருக்கும் நீங்கள், நேரடியாக முதல்வரை சந்தித்து டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று கேட்பீர்களா ? மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளருக்கு நேரடியாக நீங்கள் அழைப்பு விடுப்பீர்களா ?
பொதுவாக எல்லா ஜனநாயக சக்திகளும் மாநாட்டில் பங்கேற்பது நல்லது என்று கருத்தை சொல்கிறோம். அரசியல் கட்சித் தலைவர்கள் யார் யார் அழைப்பது என்று முன்னணி தலைவர்கள் கூடி பேசி பிறகு அறிவிப்போம். இன்னும் அது பற்றி அதிகாரப்பூர்வ முடிவுகள் எடுக்கப்படவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அதனை முடிவு செய்வோம்.
முதல்வர் அவர்களை ஏற்கனவே சந்தித்து பேசி இருக்கிறோம். மீண்டும் அவர் தமிழ்நாடு திரும்பி, மாநாடு முடிந்த பின் இது கோரிக்கை மனுவாக கொண்டு போய் அவரிடம் சமர்ப்பிப்போம்.
கேள்வி: தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் சில ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளே வலதுசாரி ஆதரவாளராக இருக்கிறார்கள் என்று எம்.பி. ரவிக்குமார் சொல்லியுள்ளதை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா ?
அதிகாரிகள் ஆளும் கட்சி இடுகிற கட்டளை ஏற்ப இயங்குகிறார்கள் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் எப்போதும் பெரும்பான்மையான அதிகாரிகள் ஆளுங்கட்சி நிலைப்பாட்டிற்கு எதிராகவும் செயல்படுவதை கடந்து 30 ஆண்டுகளில் களத்தில் நேரடியாக கண்டிருக்கிறோம். இப்போதும் அவ்வப்போது அது வெளிப்படுகிறது. சில பேர் அமைச்சர்கள் சொல்வதைக் கூட கேட்பதில்லை முதல்வர் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதை பார்க்க முடிகிறது. அந்த அடிப்படையில் ரவிக்குமார் அவர்கள் வலதுசாரி சிந்தனை உள்ள அதிகாரிகள் அதிகார வர்க்கத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கேள்வி: நடிகர் விஜய் உங்கள் பிறந்தநாளுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய மாநாட்டிற்கு அரசு தரப்பில் பல்வேறு பிரச்னைகள் தருவதாக சொல்லப்படுகிறது. அது உண்மை என நினைக்கின்றீர்களா ? விஜய்க்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன ?
நடிகர் விஜய் இன்னும் பல இடர்பாடுகளை சந்திக்க நேரிடும். இதை ஒரு இடர்பாடாக பார்க்க தேவையில்லை. அவர் திட்டமிட்டு மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்த வேண்டும். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.