ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
தவெக மாநாடு 27 ஆம் தேதி நடைபெறுவதற்கு அனுமதி கோரி மனு அளித்த போது காவல் துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநாடு நடத்துவதாக 9 பக்க அறிக்கை சமர்பித்துள்ளனர்.
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு 27 ஆம் தேதி நடைபெறுவதற்கு அனுமதி கோரி அக்கட்சியின் தலைவர் என் ஆனந்த் இன்று எஸ் பி அலுவலகத்தில் மனு அளித்த போது காவல் துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாநாடு நடத்துவதாக 9 பக்க அறிக்கை சமர்பித்துள்ளனர்.
மாநாடு நடத்துவதற்கான அறிக்கையில் கூறியிருப்பதாவது
1.மாநாட்டு திடல் மேடை வாகனம் நிற்கும் நிறங்கள் வழித்தடங்கள் தேசிய நெடுஞ்சாலை இவற்றை உள்ளடக்கிய மாதிரி வரைபடம் இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. மாநாட்டிற்கு தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் பலரும் மாலை 4 மணிக்குள் மாநாட்டு திடலை வந்தடைய வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3. மூன்றாவது கேள்விக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என பதிலளிக்கப்பட்டுள்ளது.
4. மாநாட்டிற்கு வரும் அனைத்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறை தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என உறுதி கூறுகிறோம்.
5. மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்து வரும் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்படும் அத்துடன் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் பொதுமக்கள் தாங்களாகவே தேவையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு ரயில் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாயிலாக மாநாட்டிற்கு சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
6. பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாநாட்ட திடலில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் தங்களாகவே தேவையான வாகன வசதிகளை ஏற்பாடு செய்து கொண்டு ரயில் பேருந்து உள்ளிட்ட பொதுமக்களின் இயல்பான மற்றும் பொது போக்குவரத்து வாயிலாக மாநாட்டிற்கு வந்து சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆகையால் மாநாட்டிற்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு போக்குவரத்திற்கு போதிய போக்குவரத்து முன்னேற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
8. வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு தங்களுக்கு தெரிவிக்கப்படும்.
9. பொதுமக்களின் இயல்பான வருகைக்கும், பெண்கள் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி மாநாட்டு திடல் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டால் அனைவருக்கும் இடையூறாக அமையும் ஆகையால் வாகனம் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடாக வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும்.
10. மாநாட்டு திடலில் நான்கு புறமும் ஸ்திரமான தடுப்புகள் அமைக்கப்பட்டு வடபுறம் இருந்து பொதுமக்கள் மேடைக்கு அருகில் செல்லாமல் இருக்கவும் வடபுறம் உள்ள நீர் நிலையை சுற்றியும் தகுந்த தடுப்புகள் அமைக்க ஆவண செய்யப்படும்.
11. மாநாட்டிற்கு குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பெரியோர்கள் ஆகியோருக்கு பிரத்தியாக இடம் ஒதுக்கி இருக்கையில் அமைக்கப்படும் மற்றும் பிரத்தியேகமான போதுமான அளவுக்கு கழிப்பறைகள் அமைக்கப்படும்.
12. எங்கள் கட்சியின் தலைவர் விழா மேடைக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக தடுப்புகளுடன் பிரதேயாக வழித்தடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைக்கப்படும்.
13. மாநாட்டை திடலில் நான்கு புறமும் ஸ்திரமான தடுப்புகள் அமைக்கப்படும். மாநாட்டு திடலின் மேற்புறம் சென்னை - திருச்சி இருவழி ரயில் பாதை பக்கம் மாநாட்டை திடலில் இருந்து பொதுமக்கள் எவரும் செல்லாதவாறு தகுந்த தடுப்புகள் அமைக்கப்படும்.
14. மாநாட்ட திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள திறந்தவெளி விவசாயக் கிணறுகள் அடையாளம் காணப்பட்டு விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தகுந்த தடுப்புகள் அமைக்க ஆவண செய்யப்படும்.
15. மின்வாரியத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்புடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆவண செய்யப்படும்.
16. பொதுப் போக்குவரத்து மூலமாக பொதுமக்கள் இயல்பாக மாநாட்டு திடலுக்கு செல்வதற்கும் வாகன நிறுத்துமிடத்திலிருந்து மாநாட்டு திடல் வரை செல்லும் பொது மக்களின் இயல்பான போக்குவரத்திற்கும் ஏதுவாக சாலையின் இருபுறமும் தகுந்த தடுப்புகள் அமைத்து வழித்தடம் அமைக்க ஆவணம் செய்யப்படும்.
17. பொதுமக்களின் இயல்பான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் நலன் கருதி காவல்துறையின் உத்தரவுகளை முழு ஒத்துழைப்புடன் சிறப்பு கவனம் செலுத்தி உறுதியாக கடைபிடிக்கப்படும்.