ABP EXCLUSIVE : Kiran Bedi Answers |தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் நானா...? கிரண்பேடி விளக்கம்
தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி திமுக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்கவுள்ள நிலையில், தற்போதைய ஆளுநர் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், இது குறித்து ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்
நான் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்படுவதாக வெளியாகிவரும் தகவல்கள் குறித்து தனக்கு இதுவரை எதுவும் தெரியாது என புதுச்சேரி முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான புதிய அரசு வரும் 7ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ள நிலையில், தமிழகத்தின் தற்போதைய ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் மாற்றப்படவுள்ளதாகவும், புதிய ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ள கிரண்பேடி, தமிழகத்தின் புதிய ஆளுநராக நான் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகிவரும் செய்திகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், கிரண்பேடியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் வரை சென்று கோரிக்கை மனுவையும் அளித்திருந்தார் நாராயணசாமி. அதன்பிறகு சில நாட்களில் கிரண்பேடி மாற்றப்பட்டு, புதிய பொறுப்பு துணை ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.