ஆல் பாஸ் ஆனது தெரியாமல் மீண்டும் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்… குடியாத்தம் அருகே குளறுபடி!
தான் பாஸ் செய்து விட்டோம் என்று அறியாத ஒரு மாணவரை பள்ளி நிர்வாகம் மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு வருடமே படிக்க வைத்துள்ளது.
குடியாத்தம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர், மீண்டும் அதே பள்ளியில் 10 வகுப்பை ஓராண்டாக பயின்று வருவது தெரியவந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதே நம் சமூகத்தின் குழந்தைகள் மேல் வைக்கும் முதல் போட்டி மனநிலை. அதனை கையாளும் வேலையை செய்துதான் ஒரு மனிதன் தன் வாழ்நாள் அழுத்தங்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்கிறோம். ஆசிரியர்களும், பெற்றோர்களும் நம்மை சில வருடங்கள் முன்பாகவே மனதளவில் தயார் செய்கிறார்கள். பல மாணவர்கள் தவமிருப்பதுபோல் முழு மூச்சுடன் படித்து தேர்வை எழுதிவிட்டு சம்மர் கொண்டாட்டத்தில் இணைவார்கள். எல்லா கடமைகளையும் மறந்து கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும்போது இடையில் வருவது தான் ரிசல்ட். இதையெல்லாம் கடந்து வருவது என்பது அனைவருக்கும் ஒரு அசைபோடும் நிகழ்வாகும். இதில் பலர் தேர்ச்சி பெறுவதும், சில பேப்பர்கள் தேர்ச்சி பெறாமல் போவதும் உண்டு. அந்த பேப்பர்களை மீண்டும் நடைபெறும் ஜூன் தேர்வில் ஏழுதி தேர்ச்சி பெறுவது உண்டு.
ஆனால் கொரோனா காலத்தில் அனைவரும் பாஸ் என்று அறிவித்ததால் புதிய மாணவர்கள் அந்த அனுபவங்களை பெற்றிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இன்னும் வித்தியாசமான அனுபவங்களெல்லாம் அது கொடுத்திருக்குறது. தான் பாஸ் செய்து விட்டோம் என்று அறியாத ஒரு மாணவரை பள்ளி நிர்வாகம் மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்து கிட்டத்தட்ட ஒரு வருடமே படிக்க வைத்துள்ளது. வேலூர் மாவட்டம் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்து வரும் கணேசனுக்கு தற்போது பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது. அதன்மூலம் தான் அவர் ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்வுகள் எழுதி பாஸ் செய்தது தெரிய வந்துள்ளது. அப்போது கணேசனின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், தங்கள் மகன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், இதனால் இந்த ஆண்டு தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது. இதனால் மாணவர் கணேசன் மற்றும் அவரது பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதன்பிறகுதான் நடந்தவற்றை சொல்லி புரியவைத்திருக்கிறார்கள். அதன்பிறகு தனது மகன் கடந்தாண்டே 10ம் வகுப்பு பாஸ் ஆனது பெற்றோர்ககுக்கும் புரிந்தது. கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர் கணேசனை வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மீண்டும் 10ம் வகுப்பிலேயே சேர்த்து படிக்க வைத்திருக்கிறது. மாணவரும், தான் பாஸ் ஆனது கூட தெரியாமல் கல்வி பயின்று வந்துள்ளாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது. இதுபோன்று கவனக்குறைவாக இருப்பது மாணவர் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால் இது குறித்து தீவிர ஆய்வு செய்து, இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர்.