வருவாய்த்துறையினர் வரும் 18 ஆம் தேதி ஒரு மணி நேர வேலை புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வருவாய்த் துறை மூலம் செலவு செய்த தேர்தல் செலவினங்கள் பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும், ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள் குறித்து தமிழக நிதி அமைச்சரின் குழப்பமான கருத்துக்களை, தெளிவாக்கி அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாநில தலைவர் முருகையன், தமிழகம் முழுவதும் வருவாய் துறையில் அனைத்து நிலைகளிலும் 30% காலி பணியிடங்கள் உள்ளது. அதை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாதால் மக்கள் பணி பாதிப்பதுடன் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணி சுமை ஏற்படுவதாக கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் 20,000 அலுவலக உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் நிரப்பப்படாமல் உள்ளது இதனை தமிழக அரசு உடனே நிரப்ப வேண்டும் என்றார். அதேபோல தமிழகம் முழுவதும் துணை ஆட்சியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்பப்படாதால் மக்கள் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். மேலும், வருவாய்த்துறையில் அடிப்படை கட்டமைப்புகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய கிராமங்கள் வட்டங்கள் ஏற்படுத்தி வருவாய்துறை ஊழியர்களை நிரப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில், எனவே தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தமிழக முழுவதும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் மாலை ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
மேலும் எங்களது கோரிக்கை அரசு ஏற்காவிட்டால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 30, 31 ஆம் தேதிகளில் இரு தினங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15,000 வருவாய் துறை ஊழியர்கள் இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அதேபோல கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வருவாய்த் துறை மூலம் செலவு செய்த தேர்தல் செலவினங்கள் பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் சூழலைக்கு வருவாய் துறை அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைகளை தமிழக வருவாய்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நேரங்களில் வருவாய் துறை மூலம் செலவு செய்த 20 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் வருவாய்த்துறை அலுவலர்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர். உடனடியாக தேர்தலின் போது செலவு செய்து பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர். தேர்தல் செலவு பணங்களை தராவிட்டால் தேர்தல் ஆணையம் தற்பொழுது வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொள்ள வருவாய்துறை அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளது. இந்த பணியை முற்றிலும் புறக்கணிப்பதாக கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்