TN Rain Alert: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது..! வெளுக்கப்போகிறதா மழை..?
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்துள்ளது.
வஙகக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து சற்றுமுன் கரையை கடந்தது. இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது.
மழை நிலவரம்:
02.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
04.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
05.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
02.02.2023: இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.02.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.02.2023: குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் 28 மாநிலங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.