Periyar | ஒற்றை மனிதர், ஒரு மாபெரும் சித்தாந்தம்: தமிழ்நாடு கொண்டாடும் பெரியாரின் பிறந்தநாள்..!
கோயில்களும், மத விழாக்களும் இருந்தாலும் கூட தமிழகத்தில் பெரியாரை இழிவுபடுத்தி விடமுடியாது.
தமிழக மக்களில் பெரும்பாலோனோர் நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் காணப்படுவர், இங்கே வீதிக்கு ஒரு கோயில்கள் இருக்கின்றன, பைக் தொடங்கி லாரி வரை சாமிப் படத்தைத் தவறாமல் பார்க்கலாம். சிறுபான்மையினரின் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் கூட இங்கே அதிகம்தான். ஆனாலும், 45 ஆண்டுகளுக்கு முன் மறைந்த ஒரு பகுத்தறிவாளர் இங்கு எல்லோராலும் இன்னும் கொண்டாடப்படுகிறார். அது எப்படி?
ஈ.வெ.ரா.பெரியார்
பெரியார் 1879-ஆம் ஆண்டில் பிறந்தவர். சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாகத் திகழ்பவர். திராவிட பூமிதான் அவரின் கனவு. அதற்காக அவர் தோற்றுவித்தது தான் திராவிடர் கழகம்.
ஈரோட்டில் காங்கிரஸ் தொண்டராகவே அவரது அரசியல் பயணம் தொடங்கியது. ஆனால், குருகுலங்களில் பிராமணர்கள், பிராமணர்கள் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனி உணவருந்தும் இடம் குறித்த காந்தியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அவர் காங்கிரஸில் இருந்து விலகினார். தேசியத் தலைவர் விவிஎஸ் ஐயர், இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்க காந்தி தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றார். சமபந்தி பாவமல்ல ஆனால், அவரவர் உணர்வுகள், கலாச்சாரங்களை மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார் காந்தி. இதனால் பெரியார் காங்கிரஸில் இருந்து விலகினார். இது 1925 ஆம் ஆண்டு நடந்தது. அதன்பின்னர் பெரியார், நீதிக் கட்சியில் இணைந்தார். சுய மரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் பிராமண ஆதிக்கத்தை குறிப்பாக அரச உயர் பதவிகளில் இருந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்தது. நீதிக் கட்சி அரசுப் பணிகளில் பிராமணர் அல்லாதோருக்கு இட ஒதுக்கீடு கோரியது. பின்னாளில் மெட்ராஸ் மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியபோது தனது கொள்கைக்கு சட்ட வடிவமும் கொடுத்தது.
1924ல் வைக்கோம் சத்தியாகிரக இயக்கத்தின் வாயிலாக பெரியாரின் புகழ் மாநில எல்லைகள் கடந்து பரவியது. வைக்கம் கோயிலுக்கு எதிராக இருந்த பொதுப் பாதையை ஒடுக்கப்பட்ட சாதியினரும் பயன்படுத்த உரிமை கோரி பிரம்மாண்ட இயக்கத்தைப் பெரியார் முன்னெடுத்தார். பெரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டார். இந்தப் போராட்டத்தில் வெற்றியும் கண்டார். இதனாலேயே அவர் வைக்கோம் வீரர் என்றழைக்கப்பட்டார்.
1920, 30களில் பெரியார் சமூக, அரசியல் சீரமைப்பைப் பிணைத்து தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் புழக்கத்தில் வைத்திருந்த பழமைவாதத்தை எதிர்த்தார். ஆர்ய பிராமணர்களால் தான் தமிழகத்தில் சாதிய முறை வந்தது எனப் பெரியார் மேடைகளில் முழங்கினார். 1930களில் காங்கிரஸ் இந்தித் திணிப்பை முயற்சித்தது. அப்போது பெரியார் சாதியை எதிர்த்தும் தமிழ் தேசிய அடையாளத்தை முன்னெடுத்தும் போராட்டங்களை நடத்தினார்.
1940களில் பெரியார், திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி பிரச்சாரகர்கள் இதில் இடம்பெற்றனர். திராவிட மொழிகள் கூட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு திராவிட தேசிய அடையாளத்தை நிறுவ முயற்சித்தார்.
பெரியாரின் கொள்கைகள் தமிழர்களுக்கு அரசியல் அடையாளத்தை வழங்கியது. அது இன்றளவும் அரசியலில் எதிரொலிக்கிறது.
பெரியார் 1973 ஆம் ஆண்டு தனது 94 வயதில் மறைந்தார்.
பெரியாரின் படைப்புகளும் புரட்சியும்
தமிழகத்தில் பெரியார் என்றால் தனிநபர் என்பதைவிட ஒரு சித்தாந்தம். அவர் சமூக நீதி, சுய மரியாதை, மொழிப் பெருமை ஆகியனவற்றின் அடையாளமாகத் திகழ்கிறார். சமூக சீர்திருத்தவாதியாக அவர் சமூக, கலாச்சார, பாலின பேதங்களை எதிர்த்தார். அவரது கொள்கைகள் பகுத்தறிவை பறைசாற்றின. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்றார். பெண்கள் பிள்ளைகள் பெற்றெடுக்கும் இயந்திரம் இல்லை என்றார். வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமவாய்ப்பு கோரினார். அவரது சுயமரியாதை இயக்கம் சடங்குகளற்ற திருமணங்களை ஊக்குவித்தது. திருமண முறிவு உரிமையும் பெண்களுக்கு வழங்க முழங்கினார். சொத்தில் உரிமை வழங்க குரல் கொடுத்தார். பெயர்களுக்குப் பின்னால் சாதிப் பெயரை அடையாளமாகக் கொள்ளும் பழக்கத்தை மக்கள் துறக்க வலியுறுத்தினார். தலித் மக்கள் சமைத்து வழங்கிய சமபந்தி போஜனங்களை ஊக்குவித்தார்.
நவீன தமிழகத்தில் பெரியாரின் அடையாளம் தந்தை பெரியாராக இருப்பதற்கு இவையெல்லாம் தான் காரணம்.
திராவிடர் கழத்தில் பெரியாரின் அன்புக்குரிய மாணவனாக இருந்த சி.என்.அண்ணாதுரை 1949ல் திகவில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவினார். மக்களின் மனம்கவர்ந்த தலைவராக இருந்த அண்ணா தமிழ் பிரிவினைவாதத்துக்கு எதிர்காலம் இல்லை என்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் வீச்சின் மீது மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். சினிமா மூலம் திராவிடக் கொள்கைகளை மக்களுக்குக் கொண்டு சென்ரார். 1967ல் திமுக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர் இன்று வரை திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிகள் தான் மாறிமாறி ஆட்சி செய்கின்றன. பெரியாரின் கொள்கைகளில் சில மாற்றங்களை செய்திருந்தாலும் கூட திமுக, அதிமுக இரண்டுமே பெரியாரின் வழித்தோன்றல் என்பதில் எப்போதும் பெருமிதம் கொள்கின்றன.
பெரியார் புரட்சி பிம்பம் என்றால் அண்ணா சீர்திருத்தவாதி. "கடவுள் இல்லை. கடவுளை உருவாக்கியவன் முட்டள். கடவுளைப் பற்றி உபதேசங்கள் செய்பவன் பொறுக்கி. கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்பது பெரியாரின் கோட்பாடு. அவரது விழுதுகள் இந்தக் கொள்கைகளில் சில சமரசம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை எதிர்த்த அண்ணா, பின்னாளில் நான் விநாயகர் சிலைகளையும் உடைக்க மாட்டேன், விநாயகருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன் என்று கூறியதாக இரா.கண்ணன், அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தமான Anna: The Life and Times of C N Annadurai,ல் குறிப்பிட்டிருப்பார்.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த போது பெரியார் சிலைகளின் கீழ் எழுதப்பட்டிருந்த கடவுள் மறுப்புக் கொள்கைகளுக்கு எதிராக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்ற அந்த மனுவை தள்ளுபடி செய்தது. பெரியார் தான் சொன்ன கருத்துகளின்படி நின்றார். அவருடைய கருத்துகள் அவரின் சிலைகளுக்குக் கீழ் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றது. அதேபோல், 2012ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனு தாக்கலானது. அதனை விசாரித்த நீதிபதி சந்துரு, பெரியார் சிலைகளைப் பள்ளிகளில் நிறுவுவதால் மட்டுமே பிள்ளைகளுக்கு நாத்திகக் கொள்கையை திணிக்காது. மாறாக பெரியாரின் கொள்கைகள் அவர்களுக்கு அறிவியல் புத்தியைப் புகட்டும், மனிதத்தைக் கற்றுக் கொடுக்கும், கேள்வி கேட்டும் பழக்கத்தையும் சீர்திருத்துக்கான எண்ணங்களையும் விதைக்கும் என்று கூறினார்.
பெரியார் மீதான தாக்குதல்கள் நீர்த்துபோகும்..
கோயில்களும், மத விழாக்களும் இருந்தாலும் கூட தமிழகத்தில் பெரியாரை இழிவுபடுத்தி விடமுடியாது. இதற்கு சமகாலத்திலேயே பல சாட்சிகள் இருக்கின்றன. பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்திற்கு இன்று தமிழக அரசியல் களத்தில் நேரடி தாக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் திகவைத் தாண்டியும் இன்று பெரியார் வேர் விட்டு வளர்ந்திருக்கிறார். இன்னமும் சாதிய ஒடுக்குமுறைகள் இருந்தாலும் கூட பெரியாரை விடுத்து இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது என்பதே நிதர்சனமாக உள்ளது