Krishnagiri Accident: சூளகிரி: நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி.. டிரைவர் பலி.. 4 மணி நேரம் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எத்தனால் ஏற்றி வந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே எத்தனால் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தின் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு, 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட எத்தனால் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், மேலுமலை கணவாயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. எத்தனால் ரசாயணம் தீப்பற்றும் தன்மை கொண்டதால் லாரி கவிழ்ந்ததும், அது வெடித்து திப்பிடித்தது. தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் லாரி தீப்பிடித்து எரிவதை கண்டு உடனடியாக குருபரப்பள்ளி போலீசாருக்கும், கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, பர்முகூர், ஓசூரை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் தண்ணீரை பீச்சி அடித்தனர்.
எத்தனால் எற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்ததால் சாலையில் இருபுறமும் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 500 மீட்டர் தூரத்திற்கு முன்பே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சுமார் 10 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர் விடுமுறை என்பதால் மக்கள் அனைவரும் விடுமுறை முடிந்து ஓசூர், பெங்களூருக்கு திரும்பினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வாகனங்களும், கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற வாகனங்களும் ராயக்கோட்டை வழியாக சென்றன. இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின் கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சங்கு தலைமையில், இன்ஸ்பெக்டர் சுல்தான் மற்றும் போலீசார் விபத்திற்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர்.
முன்னதாக, பலத்த தீ காயத்துடன் லாரியில் இருந்து வெளியே குதித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த டிரைவர் ராமலிங்கத்தை (45), குருபரப் பள்ளி போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.