2022-இல் நீண்ட விடுமுறைகள்: தீபாவளிக்கு இத்தனை நாள் விடுமுறையா?ட்ரிப் ப்ளானை இப்படி போடுங்க..
2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை அதிகம் உள்ள ஆண்டாக இருக்கிறது, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு விடுப்பு எடுத்தால் வருட முடிவுகளில் பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம்.
அரசு ஊழியர்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் அதிகம் எதிர்பார்த்துக்காத்திருப்பது நீண்ட விடுமுறைகளைத்தான். எல்லோருக்குமே ஊருக்கு சென்று வர வேண்டிய ஆசை இருக்கும், அல்லது நீண்ட விடுமுறை கிடைத்தால் வெவ்வேறு ஊர்களுக்கோ சுற்றுலா தளங்களுக்கோ சென்றுவர ஆசை இருக்கும். அதற்கு தமிழ்நாட்டில் வேலை செய்பவர்களுக்கு எப்படி விடுமுறை கிடைக்கிறது, அதனை எப்படி அதிகப்படுத்ததலாம், என்பதை காணலாம்.
எதிர்வரும் ஆண்டிற்கான நாட்காட்டியின்படி , 2022ஆம் ஆண்டு நீண்ட விடுமுறை அதிகம் உள்ள ஆண்டாக காணப்படுகின்றது. இதன்படி முன்கூட்டியே திட்டமிட்டு விடுப்பு எடுத்தால் வருட முடிவுகளில் பிரச்சனை வராமல் பாதுகாக்கலாம். அதன்படி, 2022 ஆண்டில் என்னென்ன நீண்ட விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன என்பதை பார்க்கலாம். 2022 ஆம் ஆண்டின் முதல் நீண்ட விடுமுறையான நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் பொங்கல் விடுமுறை முதலாவதாக இருக்கிறது. ஜனவரி மாதம் - 14ஆம் தேதி பொங்கல், 15 ஆம் தேதி மாட்டுப்பொங்கல், 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், மற்றும் 18ஆம் தேதி தைப்பூசம் ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்தது. பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஒட்டி இடையில் தூக்கி நிற்கும் 17ஆம் தேதியையும் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது தமிழக அரசு. ஊருக்கு பொங்கல் கொண்டாட சென்றவர்களுக்கு வசதியாக இருக்கும் பொருட்டு இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி சித்திரைத்திருநாளும், 15 ஆம் தேதி கிருஸ்தவ பண்டிகையான புனிதவெள்ளியும் கொண்டாடப்படுவதால், இரு தினங்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது, அதன் பிறகு 16 சனிக்கிழமையிலும், 17 ஞாயிற்றுக்கிழமையிலும் வருவதால் மொத்தம் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. அந்த நாட்களில் முன்னும் பின்னும் ஏதாவது ஒரு நாள் அதிகமாக விடுப்பு எடுத்துக்கொண்டால் முழுதாக 5 நாட்கள் விடுப்பு கிடைக்கும்.
மே மாத தொடக்கத்தில், 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருகிறது. செவ்வாய்கிழமையில் வருவதால், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இடையில் ஒரு நாள் விடுப்பு எடுத்தா போதும், முழுதாக நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். ஆனால் ரம்ஜான் பண்டிகை முன்னோ பின்னோ மாறும் வாய்புள்ளதால், அதற்கும் தயாராக இருக்க வேண்டும். இம்முறை தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமையில் வருவதும் ஒரு கவலையான செய்திதான்.
வழக்கம்போல இந்தவருட ஆகஸ்ட் மாதமும் விடுமுறைகளை புதைத்து வைத்து காத்திருக்கிறது. 13 மற்றும் 14 ஆம் தேதிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், சுதந்திர தினம் திங்கட்கிழமை வருகிறது. அத்துடன் ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டால், 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அதேபோல அதற்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் கோகுலாஷ்டமி விடுமுறை என்பதால், அதிலும் ஒரு விடுமுறை எடுத்தால் 4 நாட்கள் விடுமுறையாக கிடைக்கும்.
அக்டோபர் மாதத்தில் நிறைய விடுமுறை நாட்கள் இருந்தாலும், அதில் காந்தி ஜெயந்தியும் மிலாடி நபியும் ஞாயிற்றுக்கிழமையில் வந்து நம்மை ஏமாற்றுகின்றன. இருப்பினும், ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை கைக்கொடுக்கிறது. 3 மற்றும் நான்காம் தேதிகளில் வருவதால், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் விடுமுறை ஆகிறது. இடையில் வரும் திங்கள் கிழமை மட்டும் விடுப்பு எடுத்துக்கொண்டால் 5 நாட்கள் கொண்ட நீண்ட விடுமுறை கிடைக்கும். அதுமட்டுமின்றி இம்முறை தீபாவளி திங்கட்கிழமையில் வருகிறது. அதனை ஒட்டி கண்டிப்பாக குறைந்தது நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இந்த நீண்ட விடுமுறை நாட்களை முன்கூட்டியே திட்டமிட்டு, ரயில் மற்றும் பெருந்து முன்பதிவுகளை செய்து பண்டிகையை கொண்டாடுங்க மக்களே!