Tomato Price Hike: தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் தக்காளி.. தொடர்ந்து உச்சத்தில் விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒரு கிலோ நாட்டு தக்காளி சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தக்காளி பொதுவாக மூன்று ரகமாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முதல் ரக நாட்டு தக்காளி 80 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் 70 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் சுமார் 9 லாரி வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டு தக்காளி 15 கிலோ பெட்டி 800 ரூபாய்கும், நவீன் தக்காளி 15 கிலோ பெட்டி 900 ரூபாய்கும் விற்பனை செய்யபடுகிறது. தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதன் காரணமாக வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளியின் விலை மேலும் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தக்காளியின் விலை மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பீன்ஸ் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரட் 70 ரூபாய்க்கும், பீட்ரூட் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ இஞ்சி கடந்த ஒரு மாதமாக விலை சற்றும் இரங்காமல் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tamannaah: அத்துமீறிய ரசிகர்கள்.. ஆத்திரத்தில் கத்திய தமன்னா.. கடை திறப்பு நிகழ்ச்சியில் பரபரப்பு..!