8 வழிச்சாலை பெயரை மாற்றி செயல்படுத்துவதா? - திமுகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
அதிகாரிகளைக் கொண்டு விவசாயிகளை மிரட்டி பொய் வழக்குப் போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் எச்சரிக்கை
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் சேலம் மாவட்டத்தில் தமிழக விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. அதை தொடர்ந்து கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட சேலம் - சென்னை இடையே எட்டு வழி சாலையை தற்போது விரைவுச் சாலை என பெயர் வைத்து அதற்கான பணிகள் தொடங்கவுள்ள நிலையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் விரைவு சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு கூட்டு இயக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன் தலைமை வகித்தார்.
தொடர்ந்து விவசாயிகள் நலம் கருதி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கடந்த ஆட்சி காலத்தில் எட்டு வழி சாலை திட்டமாக இருந்து தற்போது விரைவு சாலை என்ற திட்டத்திற்கு 70% விவசாயிகளின் ஒப்புதலை பெற வேண்டும். மேட்டூர் அணை சுற்றி உள்ள தொழிற்சாலையிலிருந்து கால்வாய் மூலமாக காவிரியில் கலக்கப்படும் கழிவுநீரை மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக தடுக்க வேண்டும். சேலம் நாமக்கல் மாவட்டத்தில் ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் நிலத்தடி நீர் பாதிப்பது சுத்தம் செய்து வெளியேற்ற ஆலைகளுக்கு உத்தரவிட வேண்டும். சேலம் திருமணிமுத்தாறு சாயக் கழிவுகள் கலப்பதை நடவடிக்கை எடுத்து அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தலைவர் காவிரி தனபால் கூறுகையில், ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டு வழி சாலை திட்டத்தை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக இறந்த திமுக தற்பொழுது அந்த திட்டத்தின் பெயரை மாற்றி விரைவுச் சாலை என்ற பெயரில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், பெரும்பான்மை விவசாயிகளின் ஒப்புதல் பெறாமல் அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று கூறினார்.
மேலும், இந்தத் திட்டம் தொடர்பாக அதிகாரிகளைக் கொண்டு விவசாயிகளை மிரட்டி பொய் வழக்குப் போடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்தார். இதேபோல், தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் திறந்து விடப்படுவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் உடல்ரீதியான பிரச்சனைகளும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.