சிறுமியை கொடுமைப்படுத்திய விவகாரம்.. எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு..
வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் அவருடைய மனைவி மெர்லினா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து சிறுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், “ நான் கடந்த 26.04.2023 அன்று வேலைக்கு சேர்க்கப்பட்டேன். வேலையில் சேரும் போது சமையலுக்கு காய்கறிகளை நறுக்கி கொடுக்க வேண்டும். வீட்டினை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறிதான் வேலைக்கு எடுத்தனர். மாதம் தோறும் எனக்கு ரூ.16 ஆயிரம் சம்பளம் என்று பேசப்பட்டது. எனக்கு சொன்ன வேலையைவிட காலை, மதியம், இரவு என்று உணவினை சமைக்க கூறினார் மார்லீனா அன். எனக்கு சமையல் அவ்வளவாக தெரியாது என்று கூறினேன். இதை மனதில் வைத்துக் கொண்டு வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளே வேலை சரியாக செய்யவில்லை என்று கூறி மார்லீனா அன் என்னை கன்னத்தில் அறைந்தார். அதுமட்டுமல்லாமல் என் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார். என் செல்போனை கேட்டதற்கு தரையில் ஓங்கி அடித்து செல்போனை உடைத்து கொடுத்தார். அதுமுதல் என் செல்போன் சரியாக வேலை செய்யவில்லை. மறுநாளும் அடிக்க ஆரம்பித்தார்.
மார்லீனா அன் எனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. வேலையில் ஏற்படுகிற சின்ன தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். செருப்பு, துடைப்பக்கட்டை, கரண்டி உள்ளிட்ட பொருட்களால் என்னை கடுமையாக அடிக்க ஆரம்பித்தார்.என் அம்மா செல்வி, எனக்கு போன் செய்யும் போது கூடவே நிற்பார். நான் சந்தோசமாக இருக்கிறேன் அம்மா, எனக்கு வேலை பளு அதிகமாக இல்லை என்று சொல்ல சொல்லுவார். அப்படி நான் சொல்லவில்லை என்றால் அலைபேசியை மியூட்டில் வைத்துவிட்டு என்னை அடிப்பார். வாரத்திற்கு 2 முறை என் அம்மா போன் செய்யும் போது என்னை அதிகபட்சம் 1-2 நிமிடம் மட்டும் பேச வைப்பார்.
ஆண்டோ மதிவாணனும் என்னை இரண்டு முறை அடித்திருக்கிறார்.நான் ஏதேனும் வேலையில் தவறு செய்துவிட்டால், மிளகாய் தூளை தண்ணீரில் கரைத்து குடிக்க சொல்வார். குடிக்காமல் இருந்தால் கரண்டியை எடுத்து தாக்குவார். இதுவரை மூன்று முறை நான் மிளகாய் பொடி தண்ணீரை குடித்திருக்கிறேன். கடந்த 8 மாதமாக நான் அடிவாங்காத நாட்களே கிடையாது.
கடந்த 4.01.2024 அன்று என் அம்மா, மார்லீனா அன்னிடம் தயவு செய்து என் மகளை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அவளை பார்த்து 8 மாதம் ஆகிவிட்டது என்று கோபமாக கூற மறுநாள் 15.01.2024 அன்று மார்லீனா அன், ஆண்டோ மதிவாணன் மற்றும் மார்லீனா அன்னின் பெற்றோர்கள் ஆகியோர் என்னை எனது சொந்த ஊரான திருநருங்குன்றத்திற்கு அழைத்து வந்தனர்.என்னை பார்த்ததும் என் அம்மா செல்வி பதட்டத்துடன், உன் மீது என்ன இவ்வளவு காயம் என்று கேட்டார். அதற்கு மார்லீனா அன். அவளாகவே கபோர்டில் இடித்துக் கொண்டாள் என்று கூறினார்.
அவர்கள் சென்ற பிறகு எனக்கு நடந்த கொடுமையை என் அம்மாவிடம் கூறினேன். மார்லீனா அன் மற்றும் ஆண்டோ மதிவாணன் ஆகியோர் என்னை அடித்ததனால் உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன். தலையிலும் உடல் முழுவதும் வலி இருந்தது. 16.01.2024 அன்று உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டேன். அங்கிருந்த மருத்துவர்களிடம் எனக்கு நடந்த கொடுமையை சொன்னேன். இதனடிப்படையில் 7.01.2024 அன்று இரவு 10.00 மணி முதல் 18.012024 அன்று விடியற்காலை 1.40 மணி வரை சென்னை. நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரித்து என்னிடம் வாக்குமூலம் வாங்கி சென்றனர். மேலும் என்னை படிக்க வைப்பதாக கூறி என்னுடைய 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு போன்றவற்றை மார்லினா ஆன் வாங்கி வைத்துள்ளார். அதனை என்னிடம் பெற்றுத் தர வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது 4 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.