Fishermen Arrest: அதிர்ச்சி! - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை கைது செய்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று பிற்பகல் சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை கைது செய்தது.
மேலும் அவர்கள் வந்த 5 விசைபிடிப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மன்னார், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 10 நாட்களில் 60க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே முன்னதாக இரண்டு விசைப்படகுகளுடன் 14 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது.
மேலும் வெவ்வேறு கடற்பரப்பில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு படகின் எஞ்சின் பழுதால், தமிழக மீனவர்களின் படகுகளை கரைக்கு கொண்டு செல்ல இயலாததால், எத்தனை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எத்தனை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் தமிழக கடலோரங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் ஐந்து படகுகளை சிறை பிடித்து அதிலிருந்து 32 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 10 ஆம் தேதி 22 மீனவர்களும், 15 ஆம் தேதி 15 மீனவர்களும், மார்ச் 17 ஆம் தேதி 21 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.