Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது - பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
Ponmudi Case: சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு விதித்த தண்டனைக்கு, இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
![Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது - பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி 3 years imprisonment cannot be banned - Supreme Court takes action in Ponmudi case Ponmudi Case: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது - பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/06/796acf7b59357f2159e93e928d573e201688623286870102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ponmudi Case: பொன்முடி வழக்கில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொன்முடி கோரிக்கை நிராகரிப்பு:
சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை எனும் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை பதில் தாக்கல் செய்த பின்பு அதுகுறித்து பார்க்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு:
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்தில் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து குவித்தாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
சிறைத்தண்டனை:
இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 21ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தலா ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனைக்கு ஆளான பொன்முடி தனது உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை இழந்தார். பொன்முடி குற்றவாளி என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அவருக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
மேல்முறையீடு:
இந்த சூழலில் இன்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் அவருக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை கடந்த 12ம் தேதி விசாரித்த நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)