100 Days of CM MK Stalin: தொகுதிக்கு வந்த முதல்வர்... ‛உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ செய்தது என்ன?
100 Days of CM MK Stalin: தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட 100 நாட்கள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ஏற்படுத்திய தாக்கம் என்ன...
தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் முதல்வராக பொறுப்பேற்று நாளையுடன் 100வது நாள் நிறைவடைய உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் அவரது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் தங்களின் குறைகளை எளிதில் தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டத்திற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷில்பா பிரபாகரை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நிதிநிலை அறிக்கைக்காக இன்று கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் நிலை குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற திட்டத்தின் கீழ், மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் இதுவரை பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய சரிபார்த்தலுக்கு பின்னர் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உரிய முறையில் குறைகள் தீர்க்கப்பட்டு நல்ல முறையில் முடிவுகள் காணப்பட்டுள்ளது.” என்று தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, புகார் அளிக்கும் மனுதாரரின் ஒவ்வொரு மனுவும் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் நோக்கம் புகார் அளித்த மனுதாரரின் குறைகளுக்கு, அவர் புகார் அளித்த 100 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்பதே ஆகும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமானது ஒவ்வொரு துறையிலும் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை, மனுதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தனி எண் மூலமாக அறிந்து கொள்ள முடியும். பள்ளிக்கல்வித்துறையிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு துறைக்கும் தனி ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த திட்டத்தின் கீழ் வரும் புகார்கள் குறித்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வர். தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்திருந்தனர். பல மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர்களே நேரில் சென்று மனுதாரர்களின் குறைகளுக்கு நேரில் சென்று தீர்வு கண்ட நிகழ்வுகளும் அரங்கேறியது. எல்லா தொகுதிக்கும் முதல்வர் வர முடியும்.... என்பதை நிரூபிக்கும் வகையில் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கினார். அவரது நோக்கம் நிறைவேறுவதாகவே தெரிகிறது.