(Source: ECI/ABP News/ABP Majha)
Yercaud Flower Show: ஏற்காடு கோடை விழா - சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளிக்க காத்திருக்கும் 7 லட்சம் மலர்கள்
மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட மலர் வகைகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செய்து வருகிறது. இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கப்பட உள்ள 47 வது ஏற்காடு மலர் கண்காட்சிக்கான இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலர் கண்காட்சி:
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருவதால் நல்ல சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான பூந்தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள பல வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக ஏற்காடு ரோஜா என்றழைக்கப்படும் டேலியா மலர்கள் மட்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பூத்து குலுங்குகின்றன. மேலும் மேரி கோல்டு, டேலியா, வெர்பினா, பிளாக்ஸ் உள்ளிட்ட மலர் வகைகளும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த மலர் கண்காட்சியில் 7 லட்சம் மலர்களைக் கொண்டு நடைபெறும் பிரம்மாண்ட மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல மனதுக்கும் விருந்து படைக்க காத்திருக்கிறது.
கோடை விழா நிகழ்ச்சிகள்:
மேலும், மலர் கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படும். மலர்க்கட்காட்சி நடைபெறும் நாட்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள் கண்காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப்பண்பாட்டுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
சிறப்பு பேருந்துகள்:
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோடை விழா நடைபெறும் நாட்களான 22.05.2024 (இன்று) முதல் 26.05.2024 வரை, காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேக்கேஜ் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு பேக்கேஜ் நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துக்கு ஒரு பயணிக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக பேக்கேஜ் பயணத்திற்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த சிறப்பு பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.