சேலம் : உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன், அற்புதம் அம்மாள்..
சேலத்துக்கு வந்திருந்த பேரறிவாளன் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியை மேட்டூரில் சந்தித்தார்.
![சேலம் : உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன், அற்புதம் அம்மாள்.. Udayanithi Stalin in person met mother and son duo Perarivalan and his mother Arputhammal. சேலம் : உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன், அற்புதம் அம்மாள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/20/25347309c3b0a4e728332ab05f840dde_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சினிமா பட சூட்டிங்கிற்காக சேலத்தில் தங்கியுள்ள சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் மற்றும் அவருடைய தாய் அற்புதம்மாள் ஆகியோர் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை தெரிவித்தனர். அதேபோல திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக சேலத்துக்கு வந்த பேரறிவாளன் திராவிட விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியை மேட்டூரில் சந்தித்தார்.
அதன்பின் சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவருடைய தாய் அற்புதம்மாள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, பேரறிவாளன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறோம் அதன்படி தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் நேரில் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்து வருகிறோம். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது அதனை எடுத்து சேலம் வந்து தற்போது அவரை நேரில் சந்தித்து எங்களது நன்றியை தெரிவித்தேன். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் திரைப்படத்தை தயாரித்து வரும் மாரி செல்வராஜ் எங்களது நன்றியை நேரில் தெரிவித்தோம் என்று அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்ந்து கூறிய அவர், சாமானியர்களின் குரல் எடுபடாது என்பது போல தனது மகன் குற்றம் செய்யவில்லை என சட்டத்தின் படி நான் குரல் கொடுத்தும் எடுபடவில்லை. 31 ஆண்டுகள் கழித்து தற்போது தான் விடுதலை கிடைத்துள்ளது. 19 வயதில் சிறைக்குச் சென்ற மகன் 31 ஆண்டுகள் கழித்து தற்போது சுதந்திர மனிதனாக வெளியே வந்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சிறையில் வாடும் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியவர் இனி பேரறிவாளனுக்கு குடும்பம் அமைத்து தரவேண்டும் என்ற ஏக்கம் உள்ளது எனவே அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காக பெண் தேட தொடங்கி உள்ளோம் என்று அற்புதம்மாள் கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேரறிவாளன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”19 வயதில் சிறைக்குச் சென்ற நான் 31 ஆண்டுகள் கழித்து தற்போது வெளி உலகை காண்கிறேன். இது புது உலகமாக தெரிகிறது. சிறையில் தனக்கு எந்தவித டார்ச்சரும் நடக்கவில்லை. அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர். சிறையில் நான் சிறைவாசிகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்தேன் என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். சாமானிய மனிதன் ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் எத்தனை துன்பங்களை சந்திக்க முடியும், எத்தனை வலிகளை சுமக்க முடியும் என்பதை இந்த தண்டனை மூலம் தான் தெரிந்து கொண்டேன் . ஒரு மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவே இறுதியானது, அது ஆளுநரை கட்டுப்படுத்தும் என்பதை தீர்ப்பு ஆணித்தரமாக கூறியுள்ளது. எனவே இந்த தீர்ப்பு மற்றவர்களுக்கும் உதவியாக அமையும் என்று கூறினார்.
பேரறிவாளன் சிறை வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், பேரறிவாளன் வாழ்க்கையை படமாக எடுப்பது மிகவும் சவாலான ஒன்று. அதற்காக நிறைய நேரங்கள் செலவிட வேண்டும். அதுமட்டுமின்றி அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி அவரது வாழ்க்கையை அவரே புத்தகமாக எழுத வேண்டும்” என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)