"மத்திய அரசு உரிய நிதிகளை வழங்கி வருகிறது, தமிழ்நாட்டிற்கு எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை" - மத்திய அமைச்சர் பிஸ்வேஸ்வர் டிடு
மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி மக்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்கிறது.
மத்திய ஜல் சக்தி மற்றும் பழங்குடியின நலத்துறை இணை அமைச்சர் பிஸ்வேஸ்வர் டிடு சேலம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் (11,12.10.2022) மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இதை தொடர்ந்து நிறைவு நாளான இன்று (12.10.22) சேலம் விருந்தினர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சி குடும்ப ஆட்சியாக உள்ளது. மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு பெயரை மாற்றி மக்கள் மத்தியில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் திட்டங்களாக காட்டிக் கொள்கிறது. இது மிகவும் துரதிஷ்வசவாசமானது. அரசு அலுவலகங்களில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே உள்ளன. மத்திய அரசுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உரிய நிதிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு எந்த விதமான பாகுபாடும் காட்டப்படவில்லை.
மத்திய அரசு தமிழகத்திற்கு பிரதம மந்திரி ஆதி ஆதர்ஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை கடந்த நான்கு ஆண்டுகளில் 13.9 கோடி ரூபாய் அளவிற்கு நிதியினை விடுத்துள்ளது. வாழ்வாதார இயக்கத்திற்காக 1,134 கோடி விடுவித்துள்ளது. இதுமட்டுமல்லாது, மலைவாழ் மாணவர்களின் கல்வி உதவிக்காக 2021-22 ஆம் ஆண்டில் 540 கோடி ரூபாய் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 20 ஆம் ஆண்டு முதல் இதுவரை, தமிழகத்திற்காக ஜல் சக்தி நீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இதுவரை 1,678 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 53 சதவீதம் குடிநீர் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கிராமப்புற சுகாதார திட்டங்களுக்கு 4,532 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல இதுவரை ஒட்டுமொத்தமாக 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான நிதிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. ஆனால் மாநில அரசு இந்த நிதிகளை முறையாக பயன்படுத்துவது கிடையாது. தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் நிதிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்துவதில் மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதேபோல விவசாயிகளுக்கான திட்டங்களையும் மாநில அரசு மத்திய அரசோடு இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜல் சக்தி திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு எந்த விதமான கட்டணமும் வசூலிப்பது கிடையாது. ஆனால் ஒரு சிலர் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். மலைவாழ் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த மத்திய அரசு 700 பள்ளிகளை அமைக்க உள்ளது. இதில் தமிழகத்தில், 8 பள்ளிகள் அமைக்கப்படும். இதில் 2 பள்ளிகள் அமைக்கப்பட்டு மீதமுள்ள பள்ளிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பள்ளிகளும் 500 மாணவ மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நரிக்குறவர் இனத்தை மத்திய அரசு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசு அவர்களுக்கான கணக்கீடுகளை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் பழங்குடியினருக்கான பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு பதில் அளித்த அமைச்சர் மாநில அரசு அது குறித்து முன்மொழிவுகளை அனுப்பினால் மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் ஆனால் இதுவரை மாநில அரசு அதுபோன்ற முன்மொழிவுகளை வழங்கவில்லை” தெரிவித்தார்.