அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி:- சேலத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு...!
சேலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் வழிகாட்டுதல் படி வரும் 23ஆம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக சேலம் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வணிக பகுதிகளான நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி ரோடு, பால் மார்க்கெட் லீ பஜார் வீரபாண்டியார் நகர் சின்ன கடை வீதி மற்றும் வ.உ.சி. பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் மாலை 6 மணிவரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் டாஸ்மாக் மதுபான கடைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பில் உத்தரவு ஏதும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவையடுத்து டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை டாஸ்மாக் நிர்வாகம் குறைத்துள்ளது குறிப்பாக சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் 60 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என்று மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சுற்றுலாதளமான ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரமாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதாக உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து, நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஏற்காட்டிற்கு வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல முற்றிலும் தடைவிதித்து சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
சேலம் மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை தொடர்ந்து ஏற்காடு நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் அடிவாரம் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டன. இதன் காரணமாக ஏற்காட்டை காண ஆர்வத்தோடு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். வார இறுதி நாட்களை தவிர்த்து பிற நாட்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, RTPCR பரிசோதனை முடிவு சான்று வைத்திருத்தல் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்காட்டில் பணிபுரிபவர்கள் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைக்காக ஏற்காடு செல்பவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அதற்கான சான்று, சமீபத்தில் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை முடிவுகளை காண்பிக்க வேண்டும், இல்லாவிடில் சோதனை சாவடியிலேயே மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு ஏற்காடு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. சூழ்நிலையைப் பொருத்து இனி வரும் வார இறுதி நாட்களிலும் தடையை நீடிப்பது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.